கர்நாடக முதல்வர் சித்தராமையா அரசியல் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் இருப்பதாக அவருடைய மகன் யதீந்திரா சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து நவம்பருடன் இரண்டரை ஆண்டுகள் நிறைவடைகிறது. நவம்பரில் புரட்சி ஏற்பட்டு தலைமையில் மாற்றம் ஏற்படலாம் என்ற பேச்சுகள் கர்நாடகத்தில் நிலவி வருகிறது. தான் 5 ஆண்டுகாலம் முழுமையாக ஆட்சி புரிவேன் என முதல்வர் சித்தராமையா நம்பிக்கை தெரிவித்து வருகிறார்.
சித்தராமையாவுக்கு அடுத்து தலைமை பொறுப்புக்கு மாற்றாக வரக்கூடியவராகக் கருதப்படுவது அம்மாநில துணை முதல்வர் டிகே சிவகுமார்.
இந்நிலையில் தான், அரசியல் வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் சித்தராமையா இருப்பதாக அவருடைய மகன் யதீந்திரா சித்தராமையா தெரிவித்துள்ளார்.
பெலாகவியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அக்டோபர் 21 அன்று பேசிய சித்தராமையாவின் மகன், "என் தந்தை அரசியல் வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் இருக்கிறார். இதுமாதிரியான சூழலில் பகுத்தறிவு மிக்க முற்போக்கான சித்தாந்தங்களைக் கொண்ட ஒருவர் தலைமைப் பொறுப்புக்கு வந்து நம்மை வழிநடத்த வேண்டிய தேவை இருக்கிறது. இந்தப் பொறுப்பை சதீஷ் ஜார்கிஹோலி ஏற்றுக்கொள்வார் என நினைக்கிறேன். அனைத்து அரசியல்வாதிகள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தங்கள் மீது நம்பிக்கை கொண்டுள்ள இளம் தலைவர்களுக்கான ஒரு முன்னோடியாக இருந்து அவர் வழிநடத்துவார் என நம்புகிறேன். இத்தகைய தலைவரைக் கண்டறிவது மிகக் கடினமானது. எனவே, ஜார்கிஹோலி தனது பணியைத் தொடர வேண்டும்" என்றார் அவர்.
மூன்று நாள்களுக்கு முன்பு தான், தனது தந்தை 2028 வரை முதல்வராகத் தொடர்ந்து ஆட்சியை நிறைவு செய்வார் என்று யதீந்திரா கூறியிருந்தார். ஆனால், சித்தராமையாவின் வாரிசாக ஜார்கிஹோலியை அறிவித்திருப்பதும் சித்தாராமையா ஆலோசகராகச் செயல்பட வேண்டும் என்றும் யதீந்திரா தற்போது பேசியிருப்பது கர்நாடக அரசியல் சூழலில் கவனம் பெற்றுள்ளது.
கர்நாடக துணை முதலவ்ர டிகே சிவகுமார் இதுபற்றி கருத்து எதையும் தெரிவிக்காமல் இருக்கிறார். சதீஷ் ஜார்கிஹோலி கர்நாடக அமைச்சரவையில் பொதுப்பணித் துறை அமைச்சராக உள்ளார். யதீந்திரா பேசிய விழாவில் சதீஷ் ஜார்கிஹோலியும் பங்கேற்றிருந்தார்.
Siddaramaiah | Karnataka CM | Yathindra | Satish Jarkiholi |