மீட்புப் பணியில் காவல் துறையினர். 
இந்தியா

கர்நாடக பேருந்து விபத்தில் 9 பேர் உயிரிழப்பு: கடைசி நொடிகளை விவரிக்கும் ஓட்டுநர்! | Karnataka Bus Accident |

டீசல் டேங்கில் லாரி மோதியதால் தீ விபத்து ஏற்பட்டதாகத் தகவல்.

கிழக்கு நியூஸ்

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் தனியார் சொகுசுப் பேருந்து, விபத்தில் சிக்கி தீப்பிடித்து எரிந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவிலிருந்து தனியார் சொகுசுப் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு ஷிவமோகா நோக்கி சென்றுகொண்டிருந்தது. அதேசமயம், லாரி ஒன்று ஹிரியூரிலிருந்து பெங்களூரு நோக்கி வந்துகொண்டிருந்தது. இந்த லாரியும் பேருந்தும் மோதிக்கொண்டு விபத்தில் சிக்கின. விபத்தில் தனியார் சொகுசுப் பேருந்து தீப்பிடித்து எரிந்ததாகத் தெரிகிறது. இதில் 9 பேர் உயிரிழந்துள்ளார்கள். இந்த விபத்தானது வியாழக்கிழமை நள்ளிரவு சுமார் 2 மணியளவில் நிகழ்ந்துள்ளது.

விபத்து குறித்து ஐஜி ரவிகாந்தே கௌடா கூறியதாவது:

"நாங்கள் இதுவரை நடத்திய விசாரணையின் அடிப்படையில் லாரியானது நேராகப் பேருந்தின் டீசல் டேங்கில் மோதியிருக்கிறது. இதனால் டீசல் கசிய அது தீப்பிடித்துள்ளது. இதுவே உயிரிழப்புகளுக்குக் காரணமாகியுள்ளது.

பேருந்திலிருந்த 8 பேர் உயிரிழந்ததை உறுதி செய்துள்ளோம். லாரி ஓட்டுநரும் உயிரிழந்துள்ளார். காயமடைந்தவர்களில் 12 பேர் ஹிரியூரிலும் 9 பேர் ஷிராவிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 3 பேர் டும்கூரிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்கள்.

ஷிராவைச் சேர்ந்த ஒருவருக்கு 15 முதல் 20 சதவீதம் வரை தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அவர் பெங்களூருவிலுள்ள விக்டோரியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். மற்றவர்கள் யாரும் அபாயகரமான நிலையில் இல்லை. பேருந்தில் மொத்தம் 32 பேர் இருந்தார்கள்" என்றார்.

பேருந்து ஓட்டுநர் ரஃபீக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து நேர்ந்தது குறித்து இவர் செய்தியாளர்களிடம் விளக்கியுள்ளார்.

"லாரி சாலையின் எதிர் திசையிலிருந்து வந்து மோதியது. அது கூடுதல் வேகத்தில் வந்தது. நான் அந்த நேரத்தில் சுமார் 60 முதல் 70 கி.மீ. வேகத்தில் பேருந்தை ஓட்டிக்கொண்டிருந்தேன். அது முன்னாடி வருவதைப் பார்த்தேன். பேருந்தில் மோதியது மட்டும் தான் எனக்குத் தெரியும். அதன்பிறகு நான் எப்படி வெளியே கொண்டு வரப்பட்டேன், என்ன நடந்தது என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. எதிர் திசையில் வண்டி வருவதைப் பார்த்தவுடன் பேருந்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தேன். எனது பேருந்து எங்களுக்கு அடுத்து சென்றுகொண்டிருந்த மற்றொரு வாகனத்தையும் உரசியது. அது என்ன வாகனமெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால், என்னால் பேருந்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை" என்றார்.

பேருந்து கிளீனர் முஹமது சாதிக் கூறியதாவது:

"லாரி எதிர் திசையிலிருந்து வந்து நேராக டீசல் டேங்க் மீது மோதியது. பேருந்தின் முன்பகுதியில் நான் இருந்தேன். விபத்து நேர்ந்தபோது, நான் தூங்கவில்லை. விபத்தின் தாக்கம் காரணமாக, பேருந்தின் கண்ணாடியை உடைத்துக்கொண்டு நான் தூக்கி எறியப்பட்டேன்" என்றார் அவர்.

Karnataka | Karnataka Bus Accident |