படம்: https://x.com/dineshgrao
இந்தியா

மருந்துச் சீட்டுகளில் கன்னடத்தில் எழுத வேண்டும்: கன்னட மேம்பாட்டுக் கழகம்

கிழக்கு நியூஸ்

மருத்துவர்கள் மருந்துச் சீட்டுகளில் கன்னடத்தில் எழுத வேண்டும் என கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் உத்தரவிட வேண்டும் என கன்னட மேம்பாட்டுக் கழகம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக கன்னட மேம்பாட்டுக் கழகத் தலைவர் புருஷோத்தமா கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

"தாலுக்கா, மாவட்ட மருத்துவமனைகள் உள்பட மாநிலம் முழுக்க அனைத்து அரசு மருத்துவர்களும் மருந்துச் சீட்டுகளில் கன்னட மொழியில் எழுத முன்னுரிமை கொடுக்க வேண்டும். இப்படி செய்தால், கன்னட அடையாளத்தைக் காப்பதில் குறிப்பிடத்தக்க ஒரு நகர்வாக இது அமையும். இதைக் கட்டாயமாக்காவிட்டால், முழுமையாக நடைமுறைக்கு வருவதில் சிக்கல் ஏற்படும். இதில் அரசின் உறுதியான நிலைப்பாடு என்பது முக்கியம். அனைத்து அரசு சுகாதார மையங்கள் மற்றும் மருத்துவமனைகளிலுள்ள மருத்துவர்கள் மருந்துச் சீட்டுகளில் கன்னடத்தில் எழுத வேண்டும் என்கிற உத்தரவைப் பின்பற்ற வேண்டும்.

கன்னடம் மீதான மருத்துவர்களின் விருப்பம் மற்றும் கன்னட மொழிக்கு ஆதரவான மருத்துவர்களின் செயல்பாடுகளை அங்கீகரிக்கும் விதமாக தாலுக்கா, மாவட்டம் மற்றும் மாநில அளவில் ஆண்டுதோறும் மருத்துவர்களைக் கௌரவிக்கலாம்.

கன்னட மொழியின் வளர்ச்சிக்கு இது பெரிய உதவியாக இருக்கும். எனவே, இந்த விவகாரத்தில் கவனம் செலுத்த வேண்டும்" என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.