கமல்நாத் (கோப்புப்படம்)
கமல்நாத் (கோப்புப்படம்) ANI
இந்தியா

பொய்த்துப்போன யூகங்கள்: ராகுல் காந்தியை வரவேற்கத் தயாராகும் கமல்நாத்

ஜெ. ராம்கி

மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியுமான கமல்நாத், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவார் என்கிற யூகங்கள் வெளியான நிலையில், ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் பங்கேற்று அவரது கரத்தை வலுப்படுத்துவோம் என்று காங்கிரஸ் தொண்டர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பின்னர் கமல்நாத் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறுவார் என்கிற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால் கமல்நாத்துக்கான கதவுகள் மூடப்பட்டிருப்பதாக பாஜகவினர் அறிவித்திருந்தார்கள். இந்நிலையில் பாஜகவில் சேருவார் என்கிற யூகங்களுக்குப் பதிலடி தரும் வகையில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய் யாத்திரையில் பங்கேற்குமாறு தொண்டர்களை கேட்டுக்கொண்டிருக்கிறார்.

"தலைவர் ராகுல் காந்தியின் பாத யாத்திரையை வரவேற்க மத்தியப் பிரதேச மக்களும், காங்கிரஸ் தொண்டர்களும் உற்சாகமாக உள்ளனர். எங்கள் தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் வீதிகளில் இறங்கி, அநீதி, அடக்குமுறை மற்றும் சுரண்டலுக்கு எதிராக தீர்க்கமான போராட்டத்தை அறிவித்துள்ளார். அதில் அதிக எண்ணிக்கையில் பங்கேற்பதன் மூலம் அவரது கரங்களுக்கு வலு சேர்க்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்,

இதன் மூலம் பாஜகவில் சேரக்கூடும் என்று வெளியான வதந்திகளை கமல்நாத் மறுத்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த கமல்நாத், அரசியல் திட்டங்கள் எதுவாக இருந்தாலும் ஊடகங்களிடம் தெரிவித்துவிட்டுதான் முடிவெடுப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் பாராம்பரியம் குறித்தும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸின் சித்தாந்தம் உண்மை, மதம் மற்றும் நீதியின் சித்தாந்தம். நாட்டின் அனைத்து மதங்கள், சாதிகள், பிராந்தியங்கள், மொழிகள் என அனைத்திற்கும் சமமான இடத்தை தந்து வருகிறோம். காங்கிரஸ் கட்சியின் 138 ஆண்டுகால வரலாற்றின் ஏராளமான போராட்டங்களும் பொதுச்சேவையும் இடம்பெற்றுள்ளன. நாட்டுக்குச் சேவை செய்ய காங்கிரஸ் தலைவர்களிடையே பெரும் போட்டி இருந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு தேசத்தைக் கட்டியெழுப்புவது மட்டுமே காங்கிரஸின் ஒரே நோக்கம் இருந்தது என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்

கமல்நாத்தின் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, சட்டமன்றத் தேர்தல் முடிவுகளால் துவண்டு இருந்தாலும், காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறப் போவதில்லை என்கிறது போபால் வட்டாரம். காத்திருப்போம்.