இந்தியா

அதிகளவிலான பணத்தை சாட்சிகள் கண்டனர்..: உச்ச நீதிமன்ற விசாரணைக் குழு அறிக்கை

நீதிபதி வர்மாவின் மகள், தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் உள்பட 55 சாட்சிகள் விசாரணைக் குழுவிடம் சாட்சியம் அளித்தனர்.

ராம் அப்பண்ணசாமி

`நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டிற்குள் ஏராளமான ரூபாய் நோட்டுகள் குவிந்து கிடப்பதை சாட்சிகள் பலரும் பார்த்தனர், ஆனால் (இது தொடர்பாக) அவர் ஒருபோதும் காவல்துறையில் புகார் அளிக்கவில்லை; நீதித்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கவில்லை’ என இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் நீதிபதி யஷ்வந்த் வர்மா தில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி வகித்தபோது, அவரது அதிகாரபூர்வ வீட்டின் பொருட்கள் பாதுகாப்பு அறையில் எரிந்த நிலையில் பணக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த விவகாரத்தைத் தொடர்ந்து அவர் அலஹாபாத் உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் இல்லத்தில் இருந்து பெருமளவிலான பணம் மீட்கப்பட்ட இந்த விவகாரம் குறித்து விசாரித்த மூன்ற நீதிபதிகள் அடங்கிய விசாரணைக் குழு, அவருக்கு எதிரான குற்றச்சாட்டிற்கு `போதுமான ஆதாரம்’ இருப்பதாக அறிக்கையில் கூறியுள்ளது.

நீதிபதி வர்மாவின் மகள், தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் உள்பட 55 சாட்சிகள் விசாரணைக் குழுவிடம் சாட்சியம் அளித்தனர். பொருட்கள் பாதுகாப்பு அறையின் தரையில் சிதறிக்கிடக்கும் 500 ரூபாய் நோட்டுகளைக் காண்பிக்கும் காணொளிகளையும், புகைப்படங்களையும் விசாரணைக் குழு கருத்தில் கொண்டது.

"இவ்வளவு பெரிய அளவிலான பணத்தைப் பார்த்து நான் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தேன், என் வாழ்க்கையில் இது போன்ற ஒன்றை நான் பார்த்தது இதுவே முதல்முறை’ என்று சாட்சி ஒருவர் விசாரணைக் குழுவிடம் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாகத் தனக்கு எதுவும் தெரியாது என்றும், இந்த விவகாரம் தனக்கு எதிராகப் பின்னப்பட்ட சதி வலை என்றும் நீதிபதி வர்மா கூறியதை விசாரணைக் குழு திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

`இது சதி வேலை என்னும் பட்சத்தில், இந்த விவகாரம் குறித்து நீதிபதி வர்மாவோ அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களோ காவல்துறையிடம் புகாரளிக்கவில்லை, மூத்த நீதித்துறை அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வரவில்லை’ என்பதை விசாரணைக்குழு அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது.

மேலும், தீ விபத்து ஏற்பட்டு எரிந்த நிலையில் பணம் கண்டுபிடிக்கப்பட்ட அறை, நீதிபதி வர்மா மற்றும் அவரது குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் மட்டுமே இருந்தது என்றும், விபத்திற்குப் பிறகு அந்த அறை சுத்தம் செய்யப்பட்டு, ரூபாய் நோட்டுகள் காணாமல் போய்விட்டன என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நீதிபதி வர்மாவின் நடத்தை `இயற்கைக்கு மாறானது’ என்று அறிக்கையில் தெரிவித்துள்ள விசாரணைக் குழு அவரைப் பதவி நீக்கம் செய்யக்கோரி அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது.