நாட்டின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் பதவியேற்றுக்கொண்டார்.
இந்தியாவின் 51-வது தலைமை நீதிபதியாக கடந்தாண்டு நவம்பர் 11-ல் பதவியேற்ற சஞ்சீவ் கன்னா நேற்று பணி ஓய்வுபெற்றார். இதை ஒட்டி, 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று (மே 14) பதவியேற்றார்.
இதன் மூலம், கே.ஜி. பாலகிருஷ்ணனுக்குப் பிறகு நாட்டின் தலைமை நீதிபதி பொறுப்பை ஏற்ற பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த நபரானார் கவாய். மேலும், பௌத்த மதத்தை பின்பற்றும் நாட்டின் முதல் தலைமை நீதிபதி என்ற பெருமையை அவர் பெற்றார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விழாவில், பி.ஆர். கவாய்க்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதில் குடியரசுத் துணை தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆர்.எஸ். கவாய், கமலா கவாய் தம்பதியின் மகனாக மஹாராஷ்டிர மாநிலம் அமராவதியில் 1960-ல் பி.ஆர். கவாய் பிறந்தார். அவரது தந்தை ஆர்.எஸ். கவாய் மஹாராஷ்டிர மாநில சட்டமேலவையின் தலைவராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், பல்வேறு மாநிலங்களின் ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார்.
சட்டப்படிப்பை முடித்த கையோடு 1985-ல் பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்துவிட்டு, 1990 வரை மும்பை உயர் நீதிமன்றத்திலும், பின்னர் மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்விலும் வழக்கறிஞராக கவாய் பணியாற்றினார். அதன்பிறகு அரசு உதவி வழக்கறிஞர், கூடுதல் அரசு வழக்கறிஞர், தலைமை அரசு வழக்கறிஞர் எனப் பல்வேறு நிலைகளில் பணியாற்றினார்.
2003-ல் மும்பை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட கவாய், 2005-ல் நிரந்தர நீதிபதியானார். மும்பை, பனாஜி, நாக்பூர், அவுரங்காபாத் ஆகிய மும்பை உயர் நீதிமன்றத்தின் பல்வேறு அமர்வுகளில் அவர் பணியாற்றினார். இதன் தொடர்ச்சியாக, 24 மே 2019-ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த நடவடிக்கை ஆகியவற்றை அங்கீகரித்த உச்ச நீதிமன்ற அமர்வில் கவாய் பங்கேற்றுள்ளார். அதேநேரம், மத்திய அரசின் தேர்தல் நன்கொடைப் பத்திரங்கள் திட்டத்தைச் செல்லாது என்று அறிவித்த உச்ச நீதிமன்ற அமர்விலும் கவாய் இடம்பெற்றிருந்தார்.
6 மாதங்களில் மட்டுமே தலைமை நீதிபதி பொறுப்பில் பணியாற்றவுள்ள கவாய், 23 நவம்பர் 2025 அன்று பணி ஓய்வு பெறுவார்.