இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வயது மூப்பு காரணமாக கடந்த 26 அன்று காலமானார். இவருடைய உடல் தில்லி யமுனை நதிக் கரையில் அமைந்துள்ள நிகம்போத் காட் எரியூட்டுத் தலத்தில் சீக்கிய மத முறைப்படி தகனம் செய்யப்பட்டது.
மன்மோகன் சிங் உடல் பொது மயானத்தில் எரியூட்டப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
"டாக்டர் மன்மோகன் சிங் எவ்வளவு உயர் பதவிகளை வகித்த போதும் சாதாரண மனிதராகவே வாழ்ந்தார். சாதாரண மனிதராகவே மறைந்தார். இன்று சாதாரண மனிதராக பொது மயானத்தில் (Nigambodh Ghat) எரியூட்டப்பட்டார்.
முன்னாள் பிரதமர் மரணமடைந்தால் தனி இடத்தில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு, பிறகு அந்த இடத்திலேயே நினைவிடம் அமைக்கப்படும்.
வழக்கமாக பிரதமர்களுக்கு வழங்கப்படும் இந்த மரியாதையை மகத்தான அந்த மனிதருக்கு வழங்க மோடி அரசு மறுத்துவிட்டது.
பொது மயானத்தில் அவர் உடல் எரியூட்டப்பட்டபோது அருகில் இருந்து பார்த்தேன். அவர் மறைந்த துயரத்தோடு, அவருக்கு நிகழ்ந்த இந்த அவமரியாதை நெஞ்சை உலுக்கியது.
மன்மோகன் சிங் இந்த தேசத்தின் பொருளாதாரத்தை பேரழிவிலிருந்து மீட்டவர். உலக அரங்கில் இந்தியாவிற்கு பெருமதிப்பை உருவாக்கியவர். அவர் காலத்தில் இந்தியப் பொருளாதாரம் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக வளர்ந்தது. 27 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டவர். புரட்சிகரமான, மக்களை அதிகாரப்படுத்துகிற சட்டங்களை உருவாக்கியவர். தன் வாழ்க்கை முழுவதையும் நாட்டிற்காக அர்ப்பணித்தவர். பத்தாண்டு காலம் இந்தியாவின் பிரதமர். அப்படிப்பட்ட ஒருவருக்கு இறுதிச் சடங்கு செய்ய ஒரு இடமில்லையா? பொது மயானத்தில் தான் அவர் உடல் எரியூட்டப்பட வேண்டுமா? எதிர்கட்சியை சேர்ந்த பிரதமர் என்றால் மோடி எரியூட்ட இடம் கூட தரமாட்டாரா? ஒரு மகத்தான மனிதரின் மரணத்தில் கூட இப்படி மோசமான அரசியல் செய்ய எப்படி மனம் வந்தது?
இந்த தரம்தாழ்ந்த அரசியலால் மன்மோகன் சிங் அவர்களின் புகழ் மறைந்து விடாது. இந்த தேசம் இருக்கும் வரை அவர் புகழ் நீடித்து நிலைத்திருக்கும்" என்று ஜோதிமணி பதிவிட்டுள்ளார்.