மத்திய உள்துறை அமைச்சகம் 2019 ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்துள்ளது. இந்த சட்ட திருத்தத்தின் மூலம் ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநரின் அதிகாரங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
மேலும் இந்த திருத்தத்தால் நிர்வாக ரீதியாக ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச அரசு எடுக்கும் முக்கிய முடிவுகள் சிலவற்றுக்கு ஜம்மு-காஷ்மீரின் துணைநிலை ஆளுநரின் ஒப்புதல் தேவைப்படும் நிலை உருவாகியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தில் உள்துறை அமைச்சகம் மேற்கொண்ட திருத்தங்கள்:
ஜம்மு-காஷ்மீரின் அட்வகேட் ஜெனரல் மற்றும் அட்வகேட் ஜெனரலுக்கு உதவியாக நியமிக்கப்படும் பிற சட்ட அதிகாரிகள் ஆகியோரை நியமிக்க ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநரின் ஒப்புதல் அவசியம்.
அகில இந்திய குடிமை பணி அதிகாரிகள் மற்றும் நிர்வாக செயலாளர்களை நியமிக்கவும், இடமாற்றம் செய்யவும் ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநரின் ஒப்புதல் அவசியம்.
ஜம்மு-காஷ்மீர் அரசு வழக்கு தொடர அனுமதி வழங்கவும், அனுமதி மறுக்கவும், மேல்முறையீடு தாக்கல் செய்யவும் கோரும் எந்தவொரு முன்மொழிவுக்கும் ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநரின் ஒப்புதல் அவசியம்.
`காவல்துறை', 'பொது ஒழுங்கு', 'அகில இந்திய குடிமை பணிகள்’ மற்றும் 'ஊழல் எதிர்ப்பு பணியகம்' தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் நிதித்துறை அளிக்கும் எந்த ஒரு முன்மொழிவும் ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநரின் ஒப்புதல் அவசியம்.
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு விரைவில் பொதுத் தேர்தல் நடைபெற இருக்கிறது. உள்துறை அமைச்சகம் மேற்கொண்ட இந்த சட்டதிருத்தத்தால் தேர்தலுக்குப் பிறகு புதிதாக தேர்தெடுக்கப்படும் முதல்வரின் அதிகாரங்கள் பெருமளவு குறையும் நிலை உருவாகியுள்ளது.