இந்தியா

ஜார்க்கண்டில் 68 இடங்களில் பாஜக போட்டி!

பாஜக, ஏஜேஎஸ்யு, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனஷக்தி ஆகிய கட்சிகள் இடையே தேர்தல் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

கிழக்கு நியூஸ்

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இறுதியாகியுள்ள நிலையில், பாஜக 68 இடங்களில் போட்டியிடுகிறது.

மஹாராஷ்டிரம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. 81 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட ஜார்க்கண்டுக்கு நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 23-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இறுதியாகியுள்ளது.

பாஜக, ஜார்க்கண்ட் மாணவர்கள் சங்கம் (ஏஜேஎஸ்யு), ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனஷக்தி ஆகிய கட்சிகள் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, பாஜக மாநிலத் தலைவர் பாபுலால் மராண்டி, ஏஜேஎஸ்யு தலைவர் சுதேஷ் மஹதோ, மத்திய அமைச்சரும் ஜார்க்கண்ட் தேர்தல் பொறுப்பாளருமான ஷிவ்ராஜ் சிங் சௌஹான், அசாம் முதல்வரும் ஜார்க்கண்ட் தேர்தல் இணைப் பொறுப்பாளருமான ஹிமந்த விஸ்வ சர்மா ஆகியோர் இன்று கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தார்கள்.

"ஜார்க்கண்டில் பாஜக, ஏஜேஎஸ்யு, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனஷக்தி ஆகிய கட்சிகள் கூட்டாக தேர்தலை எதிர்கொள்கின்றன. தொகுதிப் பங்கீடு குறித்து முடிவு செய்துள்ளோம். விரைவில் வேட்பாளர்களை அறிவிப்போம்" என்றார் ஷிவ்ராஜ் சிங் சௌஹான்.

"தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. தற்போதைய நிலையில் அனைத்து ஜார்க்கண்ட் மாணவர்கள் சங்கம் (ஏஜேஎஸ்யு) 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஐக்கிய ஜனதா தளம் 2 தொகுதிகளில் போட்டியிடுகிறது. லோக் ஜனஷக்தி 1 தொகுதியிலும் போட்டியிடுகிறது. சில இடங்களில் மாற்றங்கள் வரலாம். தற்போதைய நிலையில் இது தான் நிலைமை" என்றார் ஹிமந்த விஸ்வ சர்மா. பாஜக மீதமுள்ள 68 தொகுதிகளில் போட்டியிடுகிறது.