ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஆனந்த்நாக் மாவட்டத்தில், 7 சுற்றுலாத் தலங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் உள்ளூர்வாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர், சுற்றுலாவை முதன்மையாகக் கொண்ட மாநிலம் ஆகும். ஆண்டுதோறும் 2.5 கோடி சுற்றுலாப் பயணிகள் வரும் பகுதியாக இம்மாநிலம் விளங்குகிறது. இங்கு, கடந்த ஏப்ரல் 22 அன்று ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 பேர் கொல்லப்பட்ட துயரச் சம்பவம் நாட்டையே உலுக்கியது. பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் இந்த வெறிச்செயலுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா பதிலளித்தது.
சுமார் 87 சுற்றுலாத் தலங்களைக் கொண்ட ஜம்மு காஷ்மீர் மாநிலம், பஹல்காம் தாக்குதலால் ஸ்தம்பித்தது. 50-க்கும் மேற்பட்ட சுற்றுலாத் தலங்களை மூடி, அம்மாநில துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா உத்தரவிட்டார். இதனால் மாநிலத்தின் சுற்றுலா கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மேலும், சுற்றுலாத் துறையில் மக்களின் பாதுகாப்பை தனது அரசு உறுதி செய்யும் நடவடிக்கையை எடுப்பதாக அம்மாநில முதலமைச்சர் உமர் அப்துல்லா தெரிவித்திருந்தார்.
துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் தாக்கம் குறையும் வகையில், சுற்றுலாத் தலங்கள் படிப்படியாக திறக்கப்படும் என்றும் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்தார். அதன்படி கடந்த ஜூன் 15 முதல் பல கட்டங்களாக அம்மாநில சுற்றுலாத் தலங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. அதன்படி ஆனந்த்நாக் மாவட்டத்தில் இன்று பூங்காக்கள் உட்பட 7-க்கும் மேற்பட்ட சுற்றுலாத் தலங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் உள்ளூர் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து உள்ளூர்வாசி ஒருவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “பஹல்காம் சம்பவத்திற்குப் பிறகு மூடப்பட்டிருந்த பூங்காக்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகள் இனி வரவேற்கப்படுகிறார்கள் என்ற ஒற்றைச் செய்தியை நான் சொல்லிக்கொள்கிறேன்” என்று கூறினார்.