ஓமர் அப்துல்லா 
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் ஆட்சியைப் பிடிக்கிறது இண்டியா கூட்டணி!

முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லா போட்டியிட்ட கந்தர்பல், புட்கம் ஆகிய இரு தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறார்.

கிழக்கு நியூஸ்

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் - தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி 51 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

ஜம்மு-காஷ்மீரில் 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. முதற்கட்ட வாக்குப்பதிவில் 61 சதவீதமும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 57 சதவீதமும் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவில் 69.65 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

ஜம்மு-காஷ்மீரில் கடந்த 10 ஆண்டுகளில் நடைபெறும் முதல் சட்டப்பேரவைத் தேர்தல் இது. அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் சட்டப்பேரவைத் தேர்தல் இது. முதற்கட்ட வாக்குப்பதிவின் முடிவில், கடந்த 7 தேர்தல்களில் பதிவான அதிகபட்ச வாக்குப்பதிவு என தேர்தல் ஆணையம் அறிவித்தது. மூன்று கட்ட வாக்குப்பதிவும் அமைதியான முறையில் நடைபெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி இணைந்து தேர்தலை எதிர்கொண்டன. மெஹபூபா முஃப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) கூட்டணிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது. 81 தொகுதிகளில் பிடிபி போட்டியிட்டது. பாஜகவும் தனித்துப் போட்டியிட்டது.

இதைத் தொடர்ந்து, பலத்த பாதுகாப்புகளுக்கு இடையே இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஜம்மு-காஷ்மீரில் தொங்கு சட்டப்பேரவை அமைவதற்கான வாய்ப்பு இருப்பதாகவே பெரும்பாலான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் கணித்திருந்தன.

ஆனால் இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் காலை 11.30 மணியளவில் காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி ஆட்சிப் பெரும்பான்மைக்குத் தேவையான 46 இடங்களைக் கடந்து 51 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றன.

தேர்தலுக்குப் பிறகு மெஹபூபா முஃப்தியின் பிடிபியுடன் கூட்டணி வைப்பதில் எந்த சிக்கலும் இல்லை என தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா நேற்று கூறியிருந்தார். சுயேச்சைகள் வந்தாலும் வரவேற்போம் என்றும் அவர் கூறியிருந்தார்.

தேசிய மாநாட்டுக் கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லா போட்டியிட்ட கந்தர்பல், புட்கம் ஆகிய இரு தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறார்.