அமெரிக்காவுடனான வணிகம் தொடர்புடைய பேச்சுவார்த்தை குறித்து பேசிய மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர், விவசாயிகள் நலனில் சமரசம் செய்ய முடியாது என்றார்.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்துள்ளது. ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதைக் கண்டிக்கும் வகையில் அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதுதொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கருத்தரங்கு ஒன்றில் பேசிய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர், விவசாயிகள் நலனில் சமரசம் செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளார்.
"வணிக சார்பு கொண்ட அமெரிக்க நிர்வாகத்துக்கு வேலை பார்த்துக்கொண்டு, மற்றவர்கள் வணிகம் செய்வதாகக் குற்றம்சாட்டுவது வேடிக்கையாக உள்ளது. இந்தியாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதிலோ அல்லது சுத்திகரிக்கப்பட்ட பொருள்களை வாங்குவதிலோ பிரச்னை இருந்தால், வாங்க வேண்டாம். அதை வாங்கச் சொல்லி யாரும் உங்களைக் கட்டாயப்படுத்தவில்லை. ஐரோப்பா வாங்குகிறது, அமெரிக்கா வாங்குகிறது. உங்களுக்குப் பிடிக்கவில்லையெனில் வாங்க வேண்டாம்.
அமெரிக்காவுடனான வணிகம் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன. ஓர் அரசாக விவசாயிகள் மற்றும் சிறு உற்பத்தியாளர்களின் நலன்களைப் பாதுகாக்க உறுதிகொண்டுள்ளோம். இதில் எவ்வித சமரசமும் செய்ய முடியாது" என்றார் ஜெய்ஷங்கர்.
"இரண்டாவது சிக்கல் என்னவெனில், இதை எண்ணெய் பிரச்னையாகக் காட்டுவது. ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதாக இந்தியாவைக் குறிவைக்கும் வாதம் எதுவும் சீனா மீது சுமத்தப்படுவதில்லை. ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் எண்ணெய் வாங்குவது சீனா. திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை அதிகளவில் இறக்குமதி செய்வது ஐரோப்பிய நாடுகள். ஐரோப்பிய நாடுகள் மீது இந்த வாதங்கள் எதுவும் சுமத்தப்படுவதில்லை.
போருக்கு நிதியுதவி அளிக்கிறோம் என்றால், இந்தியா - ரஷ்யா வர்த்தக உறவைக் காட்டிலும் ரஷ்யா - ஐரோப்பா வர்த்தக உறவே பெரியது. ரஷ்யாவுக்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்வது பெருகியுள்ளது. ஆனால், அந்தளவுக்குப் பெருகவில்லை. சொந்த நாட்டு நலனுக்கான முடிவுகளை எடுக்க இந்தியாவுக்கு எல்லா உரிமையும் உள்ளது" என்றும் அவர் கூறினார்.
Jaishankar | US tariffs | India | Russian Oil | India Russia | India US