இந்தியா

பதவி விலகலுக்குப் பிறகு முதல்முறையாக...: சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்பு விழாவில் ஜெகதீப் தன்கர்! | Jagdeep Dhankar |

ஜெகதீப் தன்கர் தொடர்பாக ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்ய வேண்டுமா என்று கேள்வியெழுப்பும் அளவுக்கு...

கிழக்கு நியூஸ்

குடியரசு துணைத் தலைவராகப் பதவியேற்ற சி.பி. ராதாகிருஷ்ணனின் பதவியேற்பு விழாவில் முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் இன்று கலந்துகொண்டார்.

குடியரசு துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த பிறகு, முதல்முறையாக பொது நிகழ்ச்சியில் இன்று கலந்துகொண்டார் ஜெகதீப் தன்கர்.

நாட்டின் 14-வது குடியரசு துணைத் தலைவராக ஜெகதீப் தன்கர் (74) ஆகஸ்ட் 2022-ல் பொறுப்பேற்றுக் கொண்டார். இவருடைய பதவிக்காலம் ஆகஸ்ட் 10, 2027 வரை இருந்தது. ஆனால், கடந்த ஜூலை 21-ல் மருத்துவக் காரணங்களைக் குறிப்பிட்டு குடியரசு துணைத் தலைவர் பதவியிலிருந்து உடனடியாக விலகுவதாக ஜெகதீப் தன்கர் அறிவித்தார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடருக்கு மத்தியில் ஜெகதீப் தன்கர் பதவி விலகியது சந்தேகத்தைக் கிளப்பியது.

குடியரசு துணைத் தலைவர் பதவியிலிருந்து விலகிய பிறகு, எதிர்க்கட்சியினருடன் தொடர்பில் இல்லாமல் இருந்தார் ஜெகதீப் தன்கர். இதன் காரணமாக ஜெகதீப் தன்கருக்கு என்ன ஆயிற்று என எதிர்க்கட்சியினர் கேள்விகளைக் கிளப்பத் தொடங்கினார்கள். மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ஜெகதீப் தன்கர் தொடர்பாக ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்ய வேண்டுமா என்று கேள்வியெழுப்பும் அளவுக்குப் பிரச்னை பெரிதாக வெடித்தது.

ஜெகதீப் தன்கர் தனது ராஜினாமாவுக்கு மருத்துவக் காரணங்களைக் குறிப்பிட்டாலும், தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவைப் பதவிநீக்கம் செய்யக்கோரி கொண்டுவரப்பட்ட தீர்மானம் பின்னணியில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இந்த விவகாரத்தில் அரசுத் தரப்புடன் துணை நிற்காமல், எதிர்க்கட்சியினர் ஆதரவைப் பெற்ற நீதிபதியின் பதவி நீக்கத் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது முக்கியக் காரணமாக இருக்கக்கூடும் எனக் கூறப்படுகின்றன.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் நேர்காணல் ஒன்றில், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளாரா ஜெகதீப் தன்கர் என்று கேட்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர், "உண்மை, பொய் பற்றிய உங்களுடைய பார்வை எதிர்க்கட்சியினர் சொல்வதைச் சார்ந்து அமைந்துள்ளது. இவற்றையெல்லாம் நாம் பெரிதுபடுத்தக் கூடாது. தன்கர் அரசியலமைப்புப் பதவியை வகித்துள்ளார். அரசியலமைப்புச் சட்டத்தின்படி, தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட மருத்துவக் காரணங்களுக்காகவே அவர் ராஜினாமா செய்துள்ளார். இந்த விவகாரம் பற்றி அதிகம் பேசத் தேவையில்லை" என்றார் அமித் ஷா.

குடியரசு துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த பிறகு முதல்முறையாக மௌனம் கலைக்கும் விதமாக, குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்தார். சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துக் கடிதத்தை அனுப்பியிருந்தார் ஜெகதீப் தன்கர்.

இந்நிலையில், குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டதன் மூலம் முதல்முறையாக பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் மனைவி சுதேஷ் தன்கருடன் பங்கேற்றார். பதவியேற்பு விழாவில் முன்னாள் குடியரசு துணைத் தலைவர்கள் வெங்கைய நாடு, ஹமீத் அன்சாரி ஆகியோர் அமர்ந்திருந்த வரிசையில் ஜெகதீப் தன்கர் அமர்ந்திருந்தார்.

CP Radhakrishnan | Jagdeep Dhankar | Vice President of India | Vice President |