புதிய வருமான வரி விதிப்பில் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ. 12 லட்சமாக உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
2025-2026-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்.01) காலை மக்களவையில் தாக்கல் செய்தார். வரி விகிதக் கட்டமைப்பு குறித்து தனது உரையில் அவர் கூறியதாவது,
`புதிய வருமான வரி முறையில் ரூ. 12 லட்சம் வரை வரி விலக்கு. புதிய வருமான வரி விதிப்பில் வரி விகிதக் கட்டமைப்பு மாற்றியமைக்கப்படுகிறது. வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ. 4 லட்சமாக உயர்த்தப்படும்.
ரூ. 4 லட்சம் முதல் ரூ. 8 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 5% வரி விதிக்கப்படும். ரூ. 8 லட்சம் முதல் ரூ. 12 லட்சம் வரையிலான வருவாய்க்கு 10% வரி விதிக்கப்படும். ரூ. 12 லட்சம் முதல் ரூ. 16 லட்சம் வரையிலான வருவாய்க்கு 15% வரி விதிக்கப்படும். ரூ. 16 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரையிலான வருவாய்க்கு 20% வரி விதிக்கப்படும். ரூ. 20 லட்சம் முதல் ரூ. 24 லட்சம் வரையிலான வருவாய்க்கு 25% வரி விதிக்கப்படும் மற்றும் ரூ. 24 லட்சத்திற்கும் மேல் 30% வரி விதிக்கப்படும்’ என்றார்.
பழைய வருமான வரி முறையை மாற்றும் வகையில் புதிய வருமான வரி மசோதா அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும் என பட்ஜெட் உரையில் அறிவித்தார் நிர்மலா சீதாராமன்.
மேலும், வீட்டு வாடகைக்கான டிடிஎஸ் (TDS) பிடித்தத்திற்கான வருடாந்திர வரம்பு ரூ. 2.4 லட்சத்தில் இருந்து ரூ. 6 லட்சமாக உயர்த்தப்படுவதாகவும், வருமான வரி கணக்கைத் தாக்கல்செய்ய கால அவகாசம் 4 ஆண்டுகளாக நீட்டிக்கப்படுவதாகவும் அறிவுப்பு வெளியாகியுள்ளது.