இந்தியா

மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு விவகாரம் சிக்கலானது: உச்ச நீதிமன்றம்

ராம் அப்பண்ணசாமி

தில்லியில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிவவுவதால், அண்டை மாநிலங்களிலிருந்து தங்களுக்கு நீர் திறந்துவிட உத்தரவிடுமாறு உச்சநீதிமன்றத்தை அணுகியது தில்லி அரசு. இந்த விஷயத்தில் தில்லிக்கு உதவத் தங்களிடம் போதுமான தண்ணீர் இல்லை எனத் தெரிவித்தது ஹரியானா அரசு, அதே நேரம், தண்ணீர் வழங்கி தில்லிக்கு உதவ முன்வந்தது ஹிமாச்சலப் பிரதேச அரசு.

ஆனால் தில்லிக்கும், ஹிமாச்சலப் பிரதேசத்துக்கும் இடையே மாநில எல்லை இல்லாததால், ஹிமாச்சலப் பிரதேசத்தால் திறக்கப்படும் தண்ணீர் ஹரியானா மாநிலம் வழியாகத்தான் தில்லி வந்தடைய வேண்டும். எனவே ஹரியானா அரசுக்குத் தகவல் தெரிவித்துவிட்டு தில்லிக்குத் தண்ணீர் திறந்துவிடுமாறு ஹிமாச்சலப் பிரதேச அரசுக்கு ஜூன் 7-ல் உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.

இந்நிலையில் மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுகிய தில்லி அரசு, `ஹரியானா-தில்லி எல்லைப் பகுதியில், ஹரியானா பக்கம் இருந்து நூற்றுக்கணக்கான டேங்கர் லாரிகள் சட்டவிரோதமான முறையில் நீரை உறிஞ்சி வருகின்றன. அவர்கள் மீது ஹரியானா அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்’ எனத் தெரிவித்தது.

இந்த விஷயத்தில் கருத்து தெரிவித்த உச்சநீதிமன்ற விடுமுறை அமர்வு நீதிபதிகள், `மாநிலங்களுக்கு இடையேயான யமுனை நதிநீர் பங்கீடு விவகாரம் சிக்கலானது மட்டுமல்லாமல் உணர்வுப்பூர்வமானதும் கூட. இந்த விவகாரத்தில் உதவ உச்சநீதிமன்றத்தில் நிபுணர்கள் இல்லை. எனவே சம்மந்தப்பட்ட மாநிலங்களுடன் பேசி யமுனை நதிநீர் வாரியம் இந்த விஷயத்தில் தகுந்த முடிவை எடுக்க வேண்டும்’ என்றனர்.

கடந்த ஒரு மாதமாக தில்லியில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. இந்த கோடை காலத்தில் அங்கு ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெப்ப அலை இந்தப் பிரச்சனையை மேலும் பெரிதுபடுத்தியுள்ளது.