சர்வதேச விண்வெளி மையத்துக்குச் சென்று திரும்பிய சுபான்ஷு சுக்லா இன்று இந்தியா வந்தடைந்தார்.
தில்லி முதல்வர் ரேகா குப்தா, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் உள்ளிட்டோர் தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சுபான்ஷு சுக்லாவை வரவேற்றார்கள்.
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை அடுத்த இரு ஆண்டுகளுக்குள் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. மேலும், 2035-ல் இந்தியாவுக்குச் சொந்தமான விண்வெளி நிலையத்தைக் கட்டி முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டங்களுக்கான முன்னோட்டமாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் ஆக்ஸிம் ஸ்பேஸ் ஆகியவற்றுடன் இணைந்து ஆக்ஸிம் 4 திட்டத்தின் கீழ் இந்திய வீரர் ஒருவரை சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்ப இஸ்ரோ முடிவு செய்தது.
பல மாதங்கள் மேற்கொள்ளப்பட்ட பயிற்சிக்குப் பிறகு சர்வதேச விண்வெளி மையத்துக்குச் செல்ல சுபான்ஷு சுக்லா தயாரானார். சுபான்ஷு சுக்லா தவிர அமெரிக்கா, போலந்து, ஹங்கேரி நாடுகளிலிருந்து தலா ஒருவர் வீதம் மொத்தம் 4 பேர் கடந்த ஜூன் 25-ல் விண்வெளிக்குப் புறப்பட்டார்கள்.
ஸ்பேஸ் எக்ஸின் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலத்தில் நால்வரும் விண்வெளி நோக்கி பயணித்தார்கள்.
டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி மையத்தை வெற்றிகரமாக சென்றடைந்தது. இதன்மூலம், ராகேஷ் ஷர்மாகவுக்குப் பிறகு விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை சுபான்ஷு சுக்லா பெற்றார். மேலும், சர்வதேச விண்வெளி மையத்துக்குச் சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
சர்வதேச விண்வெளி மையத்தில் 18 நாள்கள் ஆய்வு மேற்கொண்டு கடந்த ஜூலை 15-ல் பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா. இந்தத் திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்து சுபான்ஷு சுக்லா சாதனை படைத்தது மட்டுமில்லாமல், ககன்யான் திட்டத்துக்கும் நம்பிக்கை மற்றும் ஊக்கத்தைக் கொடுத்தார்.
வரலாற்றுச் சாதனையைப் படைத்த சுபான்ஷு சுக்லா இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை இந்தியா வந்தடைந்தார். தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தில்லி முதல்வர் ரேகா குப்தா, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் உள்ளிட்டோர் சுபான்ஷு சுக்லாவை வரவேற்றார்கள்.
மக்களவையில் இந்தியாவின் விண்வெளிப் பயணம் மற்றும் சுபான்ஷு சுக்லாவின் வரலாற்றுச் சாதனை குறித்து சிறப்பு விவாதம் நடைபெறவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியையும் சுபான்ஷு சுக்லா சந்தித்துப் பேசவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Shubhanshu Shukla | Shubhanshu Shukla India | ISS | International Space Station | Axiom | Axiom 4 | ISRO | NASA | Gaganyaan | Gaganyaan Mission |