எல்விஎம்3 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட சிஎம்எஸ்-3 செயற்கைக்கோள் ANI
இந்தியா

இந்தியாவின் அதிக எடைகொண்ட செயற்கைக்கோள்: வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது! | CMS-03 Satellite |

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து மாலை 5.26 மணிக்கு எல்விஎம்3 ராக்கெட் மூலம் இது விண்ணில் ஏவப்பட்டது.

கிழக்கு நியூஸ்

இந்தியக் கடற்படைக்கான ஜிசாட் 7ஆர் (சிஎம்எஸ்-03) தகவல் தொடர்பு செயற்கைக்கோளை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

இதுவரையில் இல்லாத வகையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மிக அதிக எடைகொண்ட செயற்கைக்கோள் இது. இந்தச் செயற்கைக்கோளின் எடை 4,400 கிலோ. 2013-ல் கடற்படையின் தகவல் தொடர்புக்காக முதல்முறையாக ஜிசாட்-7 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. தற்போது விண்ணில் செலுத்தப்பட்டுள்ள ஜிசாட் 7ஆர் செயற்கைக்கோள் அதிலிருந்து மேம்பட்ட வடிவமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடற்படைக்கான கடல்சார்ந்த தகவல் தொடர்பு மற்றும் கண்காணிப்பை இந்தச் செயற்கைக்கோள் வலுப்படுத்தவுள்ளது. அதிநவீன செயற்கைக்கோளான சிஎம்எஸ்-3, சுமார் ரூ. 1,600 கோடி செலவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து மாலை 5.26 மணிக்கு எல்விஎம்3 ராக்கெட் மூலம் இது விண்ணில் ஏவப்பட்டது. எல்விஎம்3 ராக்கெட்டானது முன்கூட்டியே தயார் செய்யப்பட்டு அக்டோபர் 26 முதல் ஏவுதளத்தில் வைக்கப்பட்டிருந்தது. இதை விண்ணில் ஏவுவதற்கான 24 மணி நேர கவுன்ட்டவுன் சனிக்கிழமை மாலை 5.30 மணியளவில் தொடங்கியது.

எல்விஎம்3 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டதைத் தொடர்ந்து, சிஎம்எஸ்-3 செயற்கைக்கோளானது வெற்றிகரமாக புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் அறிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "சந்திரயான் -3-ஐ தொடர்ந்து இந்தியாவின் அதிக எடை கொண்ட செயற்கைக்கோளையும் வெற்றிகரமாக விண்ணில் ஏவி எல்விஎம்3 மீண்டும் ஒருமுறை இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்துள்ளது. இந்தத் திட்டத்துக்காக ராக்கெட்டின் செயல்பாட்டுத் திறன் உள்ளிட்டவற்றை அதிகப்படுத்த வேண்டியிருந்தது" என்றார்.

சிஎம்எஸ்-2 செயற்கைக்கோள் விண்ணில் ஏவுவதற்கு முன்பு இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் சனியன்று திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்தார்கள்.

Indian Space Research Organisation (ISRO) launches LVM3-M5 carrying the CMS-03 communication satellite from Satish Dhawan Space Centre, in Sriharikota on Sunday

ISRO | LVM3-M5 | CMS-03 | Satellite | Satish Dhawan Space Centre |