கோப்புப்படம் ANI
இந்தியா

ககன்யான் திட்டப் பணிகள் 85% நிறைவு: இஸ்ரோ தலைவர் நாராயணன் | ISRO | Gaganyaan |

2027 மார்ச்சில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பத் திட்டம் என்றும் தகவல்...

கிழக்கு நியூஸ்

ககன்யான் திட்டத்தின் கீழ் டிசம்பரில் ஆளில்லாத விண் ஏவூர்தி அனுப்பத் திட்டமிட்டுள்ளோம். அதில் வயோமித்ரா என்ற எந்திர மனிதனை அனுப்பவுள்ளோம் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் இஸ்ரோ தலைவர் நாராயணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது -

“ககன்யான் திட்டம் என்பது இந்தியர்களை இந்திய ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பி, பாதுகாப்பாக திரும்பக் கொண்டுவரக்கூடிய திட்டமாகும். 2018 ஆகஸ்ட் 15 அன்று பிரதமர் மோடி அறிவித்த திட்டமாகும். இத்திட்டத்தின் பணிகளில் 80 முதல் 85% நிறைவடைந்துள்ளன. இன்னும் பணிகள் இருக்கின்றன.

இந்தத் திட்டத்தில் நிறைய பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த ஆண்டு டிசம்பரில் முதல் ஆளில்லா விண் ஏவூர்தியை அனுப்பத் திட்டமிட்டுள்ளோம். அதில் வியோமித்ரா என்ற எந்திர மனிதனை அனுப்பவுள்ளோம். இந்த முயற்சி வெற்றியடைந்தால், அதன்பின் மேலும் இரண்டு ஆளில்லா விண் ஏவூர்திகளை அனுப்பவுள்ளோம். 2027 மார்ச் மாதத்தில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கும் திட்டமிட்டுள்ளோம்.

இஸ்ரோ மட்டுமின்றி கடற்படை உள்ளிட்ட பலரும் இதில் பங்கேற்றுள்ளனர். நிலாவில் இருக்கும் கேமராக்களில் சிறந்தது நம்முடையதுதான். செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் அனுப்புவதிலும் வெற்றி கண்டது இந்தியாதான். விண்வெளித் துறையிலும் செயற்கை நுண்ணறிவு வந்துவிட்டது. வயோமித்ரா அத்தகைய தொழில்நுட்பம்தான். சந்திரயான் 4-ல் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி நிலாவின் மாதிரிகளைக் கொண்டு வர முயன்று வருகிறோம்.”

இவ்வாறு தெரிவித்தார்.