பாதையிலிருந்து விலகியது பிஎஸ்எல்வி சி 62: இஸ்ரோ அறிவிப்பு 
இந்தியா

பாதையிலிருந்து விலகியது பிஎஸ்எல்வி சி 62: இஸ்ரோ அறிவிப்பு | ISRO |

மூன்றாவது கட்டம் முடியும் தருணத்தில் விண்கலத்தில் எதிர்பாராத சிக்கல்கள்....

கிழக்கு நியூஸ்

விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி - சி 62 விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு திட்டமிட்ட பாதையிலிருந்து விலகியதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நாட்டின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், டிஆர்டிஓ தயாரித்துள்ள பாதுகாப்புத் துறையின் பயன்பாட்டிற்கான இஓஎஸ்-என் 1 என்று பெயரிடப்பட்டுள்ள அதிநவீன செயற்கைக்கோள் மற்றும் இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்குச் சொந்தமான 15 செயற்கைக்கோள்களைச் சுமந்து கொண்டு இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி 62 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீஹரிக்கோட்டாவின் சதீஷ் தவன் ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இன்று இன்று காலை 10:18-க்கு விண்கலம் விண்ணில் பாய்ந்தது.

ராணுவ பாதுகாப்பு செயற்கைக்கோள்

இதில் முதன்மை செயற்கைக் கோளான இஓஎஸ்-என் 1 தரையிலிருந்து 505 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட இருந்தது. இதன் மூலம் புவி கண்காணிப்பு, ராணுவ பாதுகாப்பு உள்ளிட்ட சேவைகளைப் பெற முடியும். விவசாயம், நகர்ப்புறத் திட்டமிடல், சுற்றுச்சூழல் ஆய்வு நடவடிக்கைகளுக்கு இந்தச் செயற்கைக் கோள் பயன்படும் என்றும் கூறப்பட்டது.

சென்னை நிறுவனத்தின் செயற்கைக்கோள்

மேலும், தற்போது விண்ணில் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி-62 விண்கலம் மூலம் சென்னையைச் சேர்ந்த ஆர்பிட்எய்டு என்ற நிறுவனம் தயாரித்த ஆயுள்சாட் என்ற செயற்கைக்கோளும் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இந்தச் செயற்கைக்கோள் புவிவட்டப் பாதையில் உலவும் செயற்கைக்கோள்களில் எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்யவிருந்தது. அதேபோல் பூமிக்கு மீண்டும் தரையிறங்கும் சோதனைக்காக ஸ்பெயின் நாட்டின் ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று உருவாக்கிய கிட் எனப்படும் சிறிய விண்கலமும் அனுப்பப்பட்டது.

விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு

இந்நிலையில், மூன்றாவது நிலையில் விண்கலம் திட்டமிடப்பட்ட பாதையை விட்டு விலகிச் சென்றுவிட்டதாகவு இஸ்ரோ அறிவித்துள்ளது. இது தொடர்பான விரிவான ஆய்வு தொடங்கியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

பாதையிலிருந்து விலகிய விண்கலம்

இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

“இன்று பிஎஸ்எல்வி சி62 விண்கலம் மற்றும் இஓஎஸ் - என் 1 செயற்கைக்கோள் திட்டத்தைச் செயல்பட முயன்றோம். இந்த பிஎஸ்எல்வி விண்கலம் இரண்டு திட எரிபொருள் நிலைகளையும் இரண்டு திரவ எரிபொருள் நிலைகளையும் கொண்டது. அதில் மூன்றாவது நிலையின் இறுதிகட்டம் வரை விண்கலத்தின் செயல்பாடுகள் திட்டமிட்டபடி இருந்தது. ஆனால், மூன்றாவது கட்டம் முடியும் தருணத்தில் விண்கலத்தில் எதிர்பாராத சிக்கல்கள் ஏற்பட்டன. அதன் விளைவாக விண்கலம் பயணப் பாதையில் இருந்து விலகியிருக்கிறது. அதன் காரணம் உள்ளிட்ட விவரங்களைக் கிடைத்துள்ள தரவுகளின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்து வருகிறோம்” என்றார்.

ISRO has announced that the PSLV-C62 spacecraft that was launched into space encountered a technical snag and deviated from the planned trajectory.