சட்டப்பேரவைத் தேர்தலில் 20 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றதை அடுத்து மும்பை மாநகராட்சித் தேர்தலில் தனித்துக் களம் காண உத்தவ் தாக்கரே திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
227 வார்டுகளைக் கொண்ட மும்பை மாநகராட்சிக்குக் கடைசியாக கடந்த 2017-ல் தேர்தல் நடைபெற்றது. இதில் 84 வார்டுகளை சிவசேனாவும், 82 வார்டுகளை பாஜகவும், 31 வார்டுகளை காங்கிரஸும், 9 வார்டுகளை தேசியவாத காங்கிரஸும் கைப்பற்றின. பாஜகவின் ஆதரவுடன் மேயர் பதவியைக் கைப்பற்றியது சிவசேனா.
இதனைத் தொடர்ந்து மார்ச் 2022-ல் மாநாகராட்சி உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. ஆனால் மாநகராட்சியின் புதிய உறுப்பினர்களை தேர்தெடுக்க இதுவரை உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை. கிட்டத்தட்ட கடந்த 30 வருடங்களாக தொடர்ச்சியாக சிவசேனா வசம் இருந்து வந்தது மும்பை மாநகராட்சி.
ஆனால் தற்போது ஏக்நாத் ஷிண்டே அணி, உத்தவ் தாக்கரே அணி என இரண்டாக உடைந்துள்ளது சிவசேனா கட்சி. மக்களவை தேர்தலில் உத்தவ் அணிக்கு 9 எம்.பி.களும், ஷிண்டே அணிக்கு 7 எம்.பி.களும் கிடைத்தன. ஆனால் நவம்பரில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் உத்தவ் அணிக்கு 20 தொகுதிகள் மட்டுமே கிடைத்தன. ஆனால் ஷிண்டே அணிக்கு 57 தொகுதிகள் கிடைத்தன.
எனவே அடுத்ததாக நடைபெறவிருக்கும் மும்பை மாநகராட்சி தேர்தலில் தன் பலத்தை நிரூபிக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் உத்தவ் தாக்கரே. இதைத் தொடர்ந்து தன் ஆதரவு முன்னாள் மாநகராட்சி உறுப்பினர்களுடன் அவர் சமீபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் மாநகராட்சித் தேர்தலுக்குத் தயாராகுமாறும், பாஜகவையும், ஷிண்டே அணியையும் சமாளிக்கும் வகையில் இந்துத்துவக் கொள்கைகளை வீடுதோறும் கொண்டு செல்லமாறும் உத்தவ் தாக்கரே அவர்களிடம் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணியில் அங்கம் வகித்தாலும் இந்த மாநகராட்சித் தேர்தலை உத்தவ் தாக்கரே தனித்து சந்தித்த திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.