இந்தியா

கர்னல் சோபியா குரேஷி குறித்து ம.பி. அமைச்சர் சர்ச்சை கருத்து: உச்ச நீதிமன்றம் கண்டனம்!

அரசியலமைப்புப் பதவியில் இருக்கும் ஒருவர் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்ன மாதிரியான பேச்சு இது?

ராம் அப்பண்ணசாமி

இந்திய ராணுவ அதிகாரி சோபியா குரேஷி குறித்து ம.பி. அமைச்சர் தெரிவித்து சர்ச்சையான கருத்துகளுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களைக் குறித்து ஆபரேஷன் சிந்தூரை இந்திய பாதுகாப்புப் படைகள் தொடங்கின.

மத்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, ராணுவத்தைச் சேர்ந்த கர்னல் சோபியா குரேஷி மற்றும் விமானப்படையைச் சேர்ந்த விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் இணைந்து, பத்திரிகையாளர் சந்திப்புகள் மூலம் இந்திய பாதுகாப்புப் படைகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த தகவல்களை வழங்கினார்கள்.

இதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையே நிலவும் பதற்றத்தை தணிக்கும் வகையில் கடந்த மே 10-ல் உடன்பாடு எட்டப்பட்டது. இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தின் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக உள்ள குன்வர் விஜய் ஷா கடந்த மே 12-ல் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு,

`அவர்கள் (பயங்கரவாதிகள்) நமது சகோதரிகளின் சிந்தூரை அழித்தனர். அவர்களை அழிக்க நாம் அவர்களின் சகோதரியை அனுப்பினோம். அவர்கள் (பயங்கரவாதிகள்) நமது ஹிந்து சகோதரர்களைக் கொன்றனர். பிரதமர் மோடி, அவர்களின் (பயங்கரவாதிகளின்) சகோதரியை ராணுவ விமானத்தில் அனுப்பி அவர்களின் வீடுகளைத் தாக்கிப் பதிலடி கொடுத்தார்.

அவர்கள் (பயங்கரவாதிகள்) நமது சகோதரிகளை விதவைகளாக்கினர். பிரதமர் மோடி அவர்கள் சமூகத்தைச் சேர்ந்த சகோதரியை அவர்களுக்கு பாடம் கற்பிக்க அனுப்பினார்’ என்று மதத்தை முன்வைத்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

தனது பேச்சில் ராணுவ அதிகாரி சோபியா குரேஷியின் பெயரை அமைச்சர் நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், அவரைத்தான் மறைமுகமாக குறிப்பிட்டதாகக் கூறி பல்வேறு தரப்பினரும் அமைச்சருக்குக் கண்டனத்தைத் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி அதுல் ஸ்ரீதரன், பி.என்.எஸ். பிரிவுகள் 152 (இந்திய இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து விளைவிக்கும் செயல்) மற்றும் 196 (குழுக்களுக்கு இடையே பகையை தூண்டுதல்) போன்றவற்றின் கீழ் அமைச்சர் விஜய் ஷா மீது வழக்குப்பதிவு செய்ய மாநில காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

இதற்கிடையே தன் பேச்சுக்கு அமைச்சர் விஜய் ஷா வருத்தம் தெரித்தார். இருப்பினும், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அமைச்சர் மீது ம.பி. மாநிலம் இந்தூரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனால், தன் மீது பதியப்பட்ட வழக்கை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் விஜய் ஷா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மீதான விசாரணையை தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு மேற்கொண்டது. அப்போது தலைமை நீதிபதி கூறியதாவது,

`அரசியலமைப்புப் பதவியில் இருக்கும் ஒருவர் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்ன மாதிரியான பேச்சு இது? ஒரு அமைச்சர் இதுபோலப் பேசலாமா? ஒரு உணர்ச்சிகரமான சூழ்நிலையில் நாடு இருக்குபோது, அத்தகைய நிலையில் (அமைச்சராக) உள்ள ஒருவர் உச்சரிக்கும் ஒவ்வொரு வாக்கியமும் கேட்கப்படுகிறது’ என்றார்.

இதைத் தொடர்ந்து அமைச்சர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் விளக்கமளித்தார். எனினும், அமைச்சர் மீது பதியப்பட்ட எஃப்.ஐ.ஆருக்கு உச்ச நீதிமன்றம் தடை உத்தரவைப் பிறப்பிக்கவில்லை. அதேநேரம் இந்த வழக்கு மீதான விசாரணை நாளை (மே 16) நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் கூறி, விசாரணையை ஒத்திவைத்துள்ளது.