ஐஆர்சிடிசி முறைகேடு வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ், பிஹார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி மற்றும் இவர்களுடைய மகனும் எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோர் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கு குறித்து சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையின்படி, 2004 முதல் 2009 வரை லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்தபோது, இரு ஐஆர்சிடிசி விடுதிகளின் பராமரிப்புப் பணிகளுக்கான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளது. ராஞ்சியிலுள்ள பிஎன்ஆர் விடுதி (BNR) மற்றும் புரியிலுள்ள பிஎன்ஆர் விடுதிகளின் பராமரிப்புப் பணிகள் சுஜாதா விடுதி வசம் முறைகேடாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை முறைகேடாக ஒதுக்கியதற்குக் கைமாறாக, பினாமி நிறுவனத்தின் பெயரில் மூன்று ஏக்கர் நிலத்தை லாலு பிரசாத் யாதவ் பெற்றதாக சிபிஐ குற்றம்சாட்டுகிறது.
இதுதொடர்பாக லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீது சிபிஐ 2017-ல் வழக்குப்பதிவு செய்தது. சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் லாரா பிராஜெக்ட்ஸ் மற்றும் சுஜாதா ஹோட்டல்ஸ் நிறுவனங்களும் இணைக்கப்பட்டுள்ளன. ஐஆர்சிடிசி பொதுமேலாளர்கள் விகே அஸ்தானா மற்றும் ஆர்கே கோயல் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், சுஜாதா விடுதியின் இயக்குநர்களும் சாணக்யா விடுதியின் உரிமையாளர்களுமான விஜய் கோச்சார் மற்றும் வினய் கோச்சார் ஆகியோர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என தில்லி நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 24 அன்று உத்தரவிட்டது.
இந்நிலையில், ஐஆர்சிடிசி விடுதிகளைப் பராமரிப்பதற்கான ஒப்பந்தத்தை முறைகேடாக ஒதுக்கியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள வழக்கில் லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் மீது குற்றச்சாட்டைப் பதிவு செய்ய தில்லி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இந்த உத்தரவின் மூலம், குற்றம்சாட்டப்பட்ட எல்லோர் மீதும் விசாரணை நடத்தப்படவுள்ளது.
ராப்ரி தேவி மற்றும் தேஜஸ்வி யாதவ் மீது குற்றவியல் சதித் திட்டம் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டைப் பதிவு செய்ய சிறப்பு நீதிபதி உத்தரவிட்டார். லாலு பிரசாத் யாதவ் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டைப் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
பிஹாரில் நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. இந்நிலையில், தில்லி நீதிமன்றம் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்குப் பின்னடைவாக அமைந்துள்ளது.
தில்லி நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து தேஜஸ்வி யாதவ் கூறியதாவது:
"நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம். வழக்கை எதிர்த்துப் போராடுவோம். தேர்தல் வரவிருப்பதால் இதெல்லாம் நடக்கும் என்பதை முன்பிலிருந்தே கூறி வருகிறோம். பிஹார் மக்கள் புத்திசாலிகள். என்ன நடக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியும்" என்றார் தேஜஸ்வி யாதவ்.
Lalu Prasad Yadav | RJD | Tejashwi Yadav | IRCTC Scam | Delhi Court | Bihar Election | Bihar Assembly Election | Bihar Elections | Bihar Assembly Elections | Bihar Election 2025 | Bihar Assembly Election 2025 |