ஈரானின் முக்கிய நகரங்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து குண்டுவீச்சு நடத்தி நிலையில், அந்நாட்டில் சிக்கித் தவிக்கும் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட மாணவர்களை பாதுகாப்பான வகையில் வெளியேற்றுவதற்கு வழிவகை செய்து தர இந்திய அரசு முன்வைத்த கோரிக்கைக்கு ஈரான் அரசு செவிசாய்த்துள்ளது.
தற்போது அந்நாட்டின் வான்வெளி மூடப்பட்டுள்ளதால் தரைவழியைப் பயன்படுத்தி அதன் அண்டை நாடுகளான அஜர்பைஜான், துர்க்மெனிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்குள் இந்திய மாணவர்கள் செல்ல ஈரான் அரசு அனுமதியளித்துள்ளது.
அங்கிருந்து விமானங்கள் மூலம் அவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட வாய்ப்புள்ளது. இதன்படி, ஈரானில் உள்ள இந்தியர்கள் வெளியேற்றுவதற்கான வழிகள் குறித்து மத்திய அரசு தற்போது தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, நேற்றிரவு (ஜூன் 15) தெஹ்ரான் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இருக்கும் சர்வதேச மாணவர்களுக்கான விடுதிக்கு அருகே நடைபெற்ற தாக்குதலில் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த இரண்டு இந்திய மாணவர்கள் காயமடைந்தனர்.
அதிர்ஷ்டவசமாக, இருவரும் நலமாக உள்ள நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக ராம்சர் நகரத்திற்கு பல்கலைக்கழக நிர்வாகத்தால் அவர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்கள் பல்வேறு ஈரானிய பல்கலைக்கழகங்களில் தொழில்முறை படிப்புகளை பயின்று வருகின்றனர். குறிப்பாக, அதில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் மருத்துவப் படிப்புகளைப் பயின்று வருகின்றனர்.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான தாக்குதல் தீவிரமடைந்துள்ளதால், ஈரானில் இருக்கும் ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும்படி, ஜம்மு காஷ்மீர் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவரும் எம்.எல்.ஏ.வுமான தாரிக் ஹமீத் கார்ரா, மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கோரிக்கை வைத்துள்ளார்.