ANI
இந்தியா

ஐபோன் 17 விற்பனை தொடக்கம்: கடைகளில் குவிந்த கூட்டம் | iPhone 17 |

ஐபோன் வாங்க பயனர்கள் கடைக்குள் முண்டியடித்ததால் மும்பை பிகேசி பகுதியில் பரபரப்பு...

கிழக்கு நியூஸ்

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 17 சீரிஸ் விற்பனை இன்று (செப். 19) முதல் தொடங்கியுள்ள நிலையில், மும்பையில் ஐபோன் வாங்கப் பெருமளவு கூட்டம் கூடியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ஆப்பிள் நிறுவனம் ஆண்டுதோறும் செப்டம்பரில் தனது சாதனங்களில் மேம்பாடுகளையும், பல புதிய அறிமுகங்களையும் செய்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான புது வரவாக ஐபோன் 17 சீரிஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை வெளியான ஐபோன் வகைகளிலேயே ஐபோன் 17 மிக மெலிதான வடிவமைப்பைக் கொண்டதாக விளங்குகிறது. மேலும் பல தொழில்நுட்ப மேம்படுத்தல்கள், புதிய வண்ணங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி ஐபோன் 17 சீரிஸ் வெளியாகியுள்ளது. இதனால் இந்த போன்கள் மீது பயனர்கள் பெரும் எதிர்பார்ப்பைக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், இந்தியாவில் ஐபோன் 17 சீரிஸ், இன்று (செப்.19) முதல் விற்பனைக்கு வந்தது. இவற்றை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் மும்பை, தில்லி, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் செல்போன் கடைகளின் வாசலில் பெரும் கூட்டம் கூடியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, மும்பையின் பிகேசி பகுதியில் உள்ள கடைகளில் காலை முதலே பயனர்களின் கூட்டம் அலைமோதியது. அப்பகுதியில் நூற்றுக்கணக்கானோர் கூடினர். பலர் அருகில் உள்ள ஊர்களில் இருந்து மும்பை பிகேசி ஆப்பிள் ஸ்டோருக்கு வந்ததாகத் தெரிவித்தனர். மேலும் காலை 5 மணி முதலே கூட்டம் கூடி இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில் கடை திறக்கப்பட்டதும் செல்போன்களை வாங்குவதற்காக ஒருவருக்கு ஒருவர் முண்டி அடித்துக் கொண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் தில்லியின் சிட்டி வாக் மால் பகுதியிலும் இரவு முதல் பயனர்கள் காத்திருந்து ஆப்பிள் ஐபோன் 17 சீரிஸ் ஸ்மார்ட் போன்களை வாங்கிச் சென்றுள்ளனர்.

ஆப்பிள் ஐபோன் சீரிஸ் 17 தொடக்க விலையாக ரூ. 82,900 முதல் அதிக பட்சமாக ரூ. 2,29,000 வரை விற்பனை ஆகின்றன. பல வண்ணங்களில் புதிய தொழில்நுட்பத்துடன் வெளியாகியுள்ள ஐபோன்கள் மக்களைக் கவர்ந்துள்ளதால், வாங்கும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிய வருகிறது.