“நாங்கள் எண்ணெய் கடத்துகிறோம் என்று சொல்லி, எங்களைக் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். இல்லவே இல்லை என்று நாங்கள் மறுத்தது அவர்களுக்குப் புரியவில்லை, அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது எங்களுக்குப் புரியவில்லை. எதுவும் செய்ய முடியாமல் தலைக்கு மேல் ஏவுகணைகள் பறந்து கொண்டிருந்ததை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தோம்” இது, ஹார்முஸ் நீரிணையிலிருந்து தப்பி வந்த இந்திய மாலுமிகளின் குரல்.
சர்வதேச கடற்பரப்பில் வணிகக் கப்பல்கள் பயணிப்பது என்பது உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடி. ஆனால், அந்த அலைகளுக்கு நடுவே உழைக்கும் மாலுமிகளின் பாதுகாப்பு என்பது காற்றில் ஆடும் தீபம். நீரலையுடன் போராடி முன்னேறும் மாலுமிகளின் கப்பல்களை நிஜப்போர்கள் முடக்கும்போது, வாழ்க்கைப் போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டியது தவிர்க்க முடியததாகிறது. இன்று உலகம், ஈரான் போரை எதிர்கொண்டிக்கும் சூழலில், அப்படிப்பட்ட ஆபத்து நிறைந்த பகுதியாக விளங்குகிறது, எண்ணெய்க் கப்பல் போக்குவரத்துகளின் இதயமாக விளங்கும் ஹார்முஸ் நீரிணை. பாரசீக வளைகுடாவையும், ஓமன் வளைகுடாவையும் இணைக்கும் உலகின் மிக முக்கியமான, குறுகலான எண்ணெய்ப் போக்குவரத்துப் பாதைதான் ஹார்முஸ் நீரிணை. இதன் வடக்கே ஈரானும், தெற்கே ஓமன், ஐக்கிய அரபு அமீரகத்தின் பகுதிகளும் அரண்களாக உள்ளன. உலகளாவிய எண்ணெய் விநியோகச் சங்கிலியின் முக்கியமான பகுதிதான் ஹார்முஸ் நீரிணை.
1. எண்ணெய்க் கடத்தல் புகாரில் சிக்கிய மாலுமிகள்
2025 டிசம்பர் 8, வளைகுடா கடற்பகுதியில் 'வேலியன்ட் ரோர்' என்ற கப்பல் தனது வழக்கமான பாதையில் சென்று கொண்டிருந்தது. அதில் இருந்தது 18 மாலுமிகள். 16 பேர் இந்தியர்கள். ஒருவர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர். இன்னொருவர் இலங்கையைச் சேர்ந்தவர். திடீரென அதிவேகப் படகுகளில் வந்த ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையினர், துப்பாக்கி முனையில் கப்பலைச் சூழ்ந்தனர். 6,000 டன் எரிபொருளைக் கடத்தியதாகக் குற்றம் சாட்டி, கப்பலைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
"எங்களுக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. திடீரென சீருடை அணிந்த வீரர்கள் கப்பலுக்குள் புகுந்து எங்களைச் சூழ்ந்து கொண்டனர். ஒரு பயங்கரவாதக் கும்பலிடம் சிக்கிக் கொண்டது போன்ற உணர்வுதான் அப்போது இருந்தது," என மீட்கப்பட்ட மாலுமிகள் பின்னர் கண்ணீருடன் பகிர்ந்துகொண்டனர். கைது செய்யப்பட்ட அப்பாவி மாலுமிகள் பந்தர் அப்பாஸ் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் இவர்கள் 50 நாள்கள் கழிக்க, ஆபத்தில் உதவ வந்தது இந்திய தூதரகம். ஆனால் சிறையிலிருந்தவர்களை விடுவிப்பதிலும் சிக்கல். அவர்கள் மீது சுமத்தப்பட்ட கடத்தல் புகாருக்கு ஆதாரமில்லாமல் போனது. இதனால் கைது செய்யப்பட்ட 18 மாலுமிகளில் முதற்கட்டமாக பிப்ரவரி 2 அன்று 8 மாலுமிகள் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் பத்திரமாக இந்தியா வந்தடைந்தனர். மீதமிருந்த 10 பேரில் ஐவரைச் சிறையிலேயே வைத்திருந்த ஈரான் படைகள், ஐவரைக் கப்பலில் வைத்தது. அதற்கான காரணம் என்னவென்று இதுவரை தெரிவிக்கப்படவில்லை. பின்னர் பிப்ரவரி 27 அன்று பந்தர் அப்பாஸ் சிறையிலிருந்த ஐவரை ஈரான் விடுவித்தது. கப்பலிலேயே தங்க வைத்திருந்தவர்களையும் சேர்த்து ஒரு விடுதியில் தங்க வைத்திருந்ததாகத் தகவல் தெரிய வருகிறது. அவர்களையும் இந்தியாவுக்கு பத்திரமாக அனுப்பி விடலாம் என்று ஈரான் எண்ணியபோதுதான், அதற்கு அடுத்த நாள் ஈரானைத் தாக்கியன இஸ்ரேலும் அமெரிக்காவும். போர் காரணமாக ஈரான் தனது வான்வெளியை மூடியிருந்தது.
இதைப் பற்றிக் கூறும்போது, ”அது அதிரடி, குழப்பமான உணர்வுகள் மற்றும் திகில் கலந்த அனுபவமாக இருந்தது. துப்பாக்கிச் சூடுகள், ஏவுகணைகள், குண்டுகளை எதிர்கொண்டோம். சிறையில் இருந்தபோது ஒவ்வொரு இரவும் எங்களுக்கு நரகமாக இருந்தது. வான்வழித் தாக்குதலுக்கான அபாயச் சங்குகள் முழங்கும்போதெல்லாம், எங்கள் வாழ்நாள் முடிந்துவிட்டது என்றுதான் நினைப்போம். போர் நடக்கும் ஒரு நாட்டில், அதுவும் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது திகில் நிறைந்த அனுபவம் நாங்கள் வெளியேற்றப்படுவதற்கு ஒரு நாள் முன்பு போர் தொடங்கிவிட்டது. அதுவே பெரும் முட்டுக்கட்டையைப் போல் தோன்றியது" என்று அந்தக் கப்பலின் கேப்டன் விஜய் கூறியதாக பதிவு செய்துள்ளது டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ். அதனால் ஈரானிலிருந்து நிலம் வழியாக ஆர்மேனியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கடும் குளிர், கரடுமுரடான சாலைகள் என அந்தப் பயணம் நீடித்தது. ஈரானிலிருந்து ஆர்மீனியா வழியாக சுமார் 2000 கிலோமீட்டர் தூர கடும் பயணத்தைக் கடக்க நேர்ந்தது.
"நாங்கள் ஜுல்ஃபா அருகே உள்ள ஆர்மீனிய எல்லையை நோக்கிச் சென்றோம். அருகிலுள்ள பகுதிகளிலும் ஏவுகணைகள் விழுந்து கொண்டிருந்தன. இங்கு நிலைமை இவ்வளவு மோசமாக இருப்பதால், வழியில் ஆபத்து இருந்தாலும் எல்லையை அடைய முயற்சிப்பது நல்லது என்று நாங்கள் நினைத்தோம்” என்கிறார், மாலுமிகள் கூட்டத்தில் ஒருவரான 27 வயது இளைஞன் கேதன் மேத்தா. சிறைவாசம், ஆர்மேனிய பாலைவனத்தின் வழியாக நெடும்பயணம், போருக்கு நடுவில் ஆர்மேனியாவில் 3 நாள் காத்திருப்பு, பின்னர் துபாய், அதன்பின் மும்பை என்று அலைந்து திரிந்து மார்ச் 29 அன்று மும்பைக்கு வந்து சேர்ந்தனர் மாலுமிகள். விடுவிக்கப்பட்ட பிறகும் போர் நிலவும் நிலப்பரப்பில் கிட்டத்தட்ட 30 நாள்கள், உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பயணம். கதி கலங்க வைத்த தங்கள் கதையை இப்போது அந்த எட்டு மாலுமிகளும் ஊடகங்களுக்குத் தெரிவித்து வருகின்றனர்.
2. மறைமுகமாக தப்பி வந்த எண்ணெய்க் கப்பல்
ஈரானிடம் எக்குத்தப்பாக சிக்கி மீண்ட கதை இதுவென்றால், யாரிடமும் சிக்காமல் சாமர்த்தியமாக கப்பல் வந்தது தான் அடுத்த கதை! இது நடந்தது மார்ச் 11. ஈரான் - இஸ்ரேல் போர் தொடங்கி சரியாக 12-வது நாள். சவுதி அரேபியாவில் ராஸ் டனுரா முனையத்திலிருந்து 1.35 லட்சம் டன் கச்சா எண்ணெயுடன் மார்ச் 1 அன்று புறப்பட்டது ஷென்லாங் சூயஸ்மேக்ஸ் என்ற எண்ணெய்க் கப்பல். இது தென்னாப்ரிக்க நாடான லைபீரியா கொடியுடன் கூடிய, இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் கொண்டு வருவதற்கான அனுப்பப்பட்ட கப்பல். பாகிஸ்தானி, பிலிப்பைன்ஸ் நாட்டினர், இந்தியர்கள் உட்பட 29 பேரைக் கொண்டிருந்த இந்தக் கப்பலுக்கு இந்தியர் ஒருவர்தான் கேப்டனாக இருந்தார். இது புறப்பட்ட நாள் என்பது ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா போர் தொடங்கியதற்கு அடுத்த நாள். சவுதி அரேபியாவின் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட ஷென்லாங் கப்பலுக்கு முன்னால் இருந்த சவால் சாதாரணமானது அல்ல. ஹார்முஸ் நீரிணையைத் தாண்டினால் மட்டுமே இந்தியப் பெருங்கடலை அடைய முடியும். ஆனால், அந்தப் பாதையோ ஈரானியப் படைகளின் முழுக் கட்டுப்பாட்டில் இருந்தது. இதனால் ஒரு துணிச்சலான முடிவை எடுத்தார், கப்பலின் கேப்டன் சுக்ஷாந்த் சிங் சந்து.
ஷென்லாங் கப்பலின் கேப்டன் மற்றும் மாலுமிகள் ஒரு தந்திரமான திட்டத்தைத் தீட்டினர். ஒரு போர்க்கப்பல் கூடத் துணியாத ஒரு காரியத்தை அவர்கள் செய்யத் துணிந்தனர். தங்கள் அடையாளத்தை மறைத்துக் கொண்டனர். பொதுவாக ஒவ்வொரு கப்பலும் தனது இருப்பிடத்தையும் அடையாளத்தையும் காட்ட 'டிரான்ஸ்பாண்டர்' எனப்படும் தானியங்கி அடையாள முறையைப் பயன்படுத்தும். ஆனால், ஈரானிய ரேடாரில் சிக்காமல் இருக்க, மாலுமிகள் அந்தத் தொழில்நுட்பக் கருவியை அணைத்துவிட்டனர். இது கடலில் ஒரு கப்பல் காணாமல் போவதற்குச் சமம். விளக்குகளை அணைத்தனர். இரவு நேரத்தில் கப்பலில் எரியும் சிறிய விளக்கு கூட ஏவுகணைகளுக்கு இலக்காகிவிடும். எனவே, கப்பலின் அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டன. நடுக்கடலில் ஒரு பிரம்மாண்டமான மலை போன்ற கப்பல், ஒரு சிறு வெளிச்சம் கூட இல்லாமல் நிழலாக நகர்ந்தது. எதிரிகளை திசைதிருப்ப, கப்பலில் பறந்த கொடியைக் கூட மாற்றி, வேறு நாட்டு அடையாளத்துடன் பயணித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆபத்தான பயணத்திற்குப் பிறகு, ஷென்லாங் கப்பல் வெற்றிகரமாக ஈரானியப் படைகளின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு இந்தியப் பெருங்கடலுக்குள் நுழைந்தது. மார்ச் 12 அன்று காலையில், அந்தப் பிரம்மாண்டக் கப்பல் மும்பை துறைமுகத்தை வந்தடைந்தது. அதன்பின் இந்தக் கப்பல் கொண்டு வந்த 1.35 லட்சம் டன் கச்சா எண்ணெய், மும்பை மஹூல் சுத்திகரிப்பு நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நிலவும் எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்ய இது பெரும் உதவியாக அமைந்துள்ளது.
ஷென்லாங் கப்பல் தப்பித்தாலும், போர் இன்னும் ஓயவில்லை. தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள போரில் ஹார்முஸ் நீரிணை அமெரிக்காவாலும் ஈரானாலும் முடக்கத்திற்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாகி வருகிறது. சர்வதேச அரசியல் மோதல்களில், சம்பந்தமே இல்லாத சாமானிய மாலுமிகளின் உயிர்கள் பணயம் வைக்கப்படுவது வேதனையானது என்பதையும் மறுக்க முடியாதுதான்.
Amid rising tensions and conflict around the Strait of Hormuz, two contrasting stories highlight the dangers faced by sailors. In one incident, an oil tanker crew—mostly Indians—was captured by Iranian forces over false smuggling charges and endured prison, war, and a risky land escape before finally returning home. In another, a different oil tanker successfully avoided detection by switching off tracking systems and sailing in darkness, safely delivering crude oil to India. Together, these incidents show how global conflicts put innocent seafarers at serious risk while threatening a critical global oil route.