கார் விபத்து - கோப்புப்படம் ANI
இந்தியா

அதிவேகமாக வாகனங்களை இயக்குவதால் ஏற்படும் விபத்துகள்: இழப்பீடு வழங்குவது கட்டாயமல்ல!

காப்பீடு நிறுவனத்திற்கு ஆதரவாக மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை கர்நாடக உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

ராம் அப்பண்ணசாமி

அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டி ஒருவர் உயிரிழக்கும் பட்சத்தில், சம்மந்தப்பட்ட நபர்களின் குடும்பங்களுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு தொகையை வழங்குவது கட்டாயமல்ல என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதிவேகமாக கார் ஓட்டி உயிரிழந்த ஒருவரின் குடும்பத்தினர் ரூ. 80 லட்சம் இழப்பீட்டை வழங்க காப்பீட்டு நிறுவனத்திற்கு உத்தரவிடக்கோரி தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்தது.

கடந்த 18 ஜூன் 2014 அன்று, கர்நாடகத்தின் மல்லசந்திரா கிராமத்திலிருந்து அரசிகெரே நகரத்திற்கு என்.எஸ். ரவிஷா என்பவர் ஃபியட் லினியா ரக காரில் சென்றுகொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது. அவரது தந்தை, சகோதரி மற்றும் சகோதரியின் குழந்தைகளும் அப்போது அதே காரில் இருந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்து ரவிஷா உயிரிழந்தார்.

போக்குவரத்து விதிகளைப் பின்பற்றாமல் ரவிஷா அலட்சியமான வகையில் காரை ஓட்டிச் சென்றதாகவும், அதனாலேயே வாகனத்தின் கட்டுப்பாட்டை அவர் இழந்ததாகவும் விபத்து அறிக்கையில் காவல்துறை தகவல் தெரிவித்திருந்தது.

ரவிஷா மாதந்தோறும் ரூ. 3 லட்சம் சம்பாதிக்கும் ஒரு வெற்றிகரமான ஒப்பந்ததாரர் என்று குறிப்பிட்டு, அவரது குடும்பத்தினர் யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்திடம் ரூ. 80 லட்சம் இழப்பீடு கோரியுள்ளனர். அதற்கு காப்பீடு நிறுவனம் மறுப்பு தெரிவிக்கவே, மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயத்தில் அவரது குடும்பத்தினர் முறையிட்டுள்ளனர்.

ஆனால், காப்பீடு நிறுவனத்திற்கு ஆதரவாக மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அதை கர்நாடக உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. இந்நிலையில், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மேற்கோள்காட்டி, மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தங்களது அலட்சியத்தால் ஏற்படும் விபத்துகளுக்கு தனிநபர்கள் இழப்பீடு கோர முடியாது என்பதை இந்த தீர்ப்பு எடுத்துக்காட்டியுள்ளது.