கடந்த மாதம் குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் நடைபெற்ற ஏர் இந்தியா போயிங் ட்ரீம்லைனர் விமான விபத்து தொடர்பான ஆரம்ப விசாரணை குறித்து விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB) கடந்த ஜூன் 12 அன்று முதற்கட்ட அறிக்கையை வெளியிட்டது.
இதை மேற்கோள்காட்டியுள்ள ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்பல் வில்சன், விமானத்தில் அல்லது அதன் இயந்திரங்களில் எந்தவிதமான இயந்திர கோளாறும், பராமரிப்புப் பிரச்னையும் இல்லை என்று கூறியுள்ளார்.
விமானம் புறப்பட்ட ஒரு வினாடிக்குள் என்ஜின்களுக்கான எரிபொருள் சுவிட்சுகள் துண்டிக்கப்பட்டு, (விமானிகள் அமருமிடமான) காக்பிட்டில் குழப்பம் ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த 15 பக்க விசாரணை அறிக்கையில் இந்த செயல் எவ்வாறு நடைபெற்றது அல்லது இதை யார் செய்தது என்பது குறித்து எந்த தகவலும் இடம்பெறவில்லை.
காக்பிட் குரல் பதிவை மேற்கோள்காட்டியுள்ள அறிக்கை, ஒரு விமானி `எதனால் சுவிட்ச் துண்டிக்கப்பட்டது’ என்று கேட்டதாகவும், அதற்கு மற்றொரு விமானி `தான் அவ்வாறு செய்யவில்லை’ என்றும் பதிலளித்ததாகவும் கூறுகிறது.
இந்நிலையில், இந்த விசாரணை அறிக்கையை முன்வைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஏர் இந்தியா ஊழியர்களுக்கு அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கேம்பல் வில்சன் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில், `அனைத்து கட்டாய பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. எரிபொருளின் தரத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை, (விமானம்) புறப்படும்போது எந்த அசாதாரணமும் இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
இரண்டு விமானிகளும் விமானத்தை இயக்குவதற்கு முந்தைய கட்டாய சுவாச பகுப்பாய்வு சோதனைகளில் தேர்ச்சி பெற்றனர் என்றும், ஏஏஐபி அறிக்கையில் அவர்களின் மருத்துவ நிலை தொடர்பான எந்த விஷயங்களையும் குறிப்பிடவில்லை என்றும் வில்சன் சுட்டிக்காட்டினார்.
`விசாரணை இன்னும் முடிவடையாததால், முன்கூட்டியே (அது குறித்த) முடிவுகளுக்கு வருவதை தவிர்க்குமாறு’ செய்திக்குறிப்பில் ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதுபோலவே, விமான விபத்து குறித்த ஏஏஐபி விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால், இந்த நேரத்தில் அவசரமாக முடிவுகளுக்கு வருவது முதிர்ச்சியற்றது என்று மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு கருத்து தெரிவித்திருந்தார்.