ANI
இந்தியா

இந்திரா காந்தி எங்களைச் சிறையில் அடைத்தார், ஆனால்…: லாலு பிரசாத் யாதவ்

ராம் அப்பண்ணசாமி

இந்தியாவில் எமர்ஜென்சி அமலில் இருந்த காலத்தில் நடந்த சம்பவங்களைக் குறிப்பிட்டு தன் எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார் ராஷ்டிரிய ஜனதா தள கட்சித் தலைவர் லல்லு பிரசாத் யாதவ். இந்தப் பதிவில் தற்போது எமர்ஜென்சி குறித்துப் பேசி வரும் பாஜகவினரை அவர் விமர்சித்துள்ளார். அவரின் பதிவு பின்வருமாறு:

`அன்றைய பிரதமர் இந்திரா காந்தியால் அமல்படுத்தப்பட்ட எமர்ஜென்சிக்கு எதிரான இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல, ஜெயபிரகாஷ் நாராயண் அமைத்த வழிநடத்தல் குழுவின் ஒருங்கிணைப்பாளராக நான் இருந்தேன். எமர்ஜென்சி காலத்தில் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 15 மாதங்களுக்கு மேல் சிறையில் இருந்தேன்.

எமர்ஜென்சி குறித்து இப்போது பேசிவரும் எந்த ஒரு மத்திய அமைச்சரையும் அப்போது நானோ என் சகாக்களோ பார்த்ததில்லை. இப்போது சுதந்திரம் குறித்து பேசி வரும், மோடி, ஜெ.பி.நட்டா போன்றோரை அப்போது நாங்கள் கேள்விப்பட்டதே இல்லை

எங்களில் பலரை இந்திரா காந்தி சிறையில் அடைத்தார். ஆனால் எங்களை ஒரு போதும் அவர் தூற்றியதில்லை. அவரும் அவருடைய அமைச்சர்களும் எங்களை தேச விரோதிகள் என்று அழைத்ததில்லை.

நம் இந்திய அரசியலமைப்பின் சிற்பி பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவைக் கெடுக்கும் வகையில் நடந்துகொண்ட வன்முறையாளர்களை அவர் ஒருபோதும் அனுமதித்ததில்லை. 1975 சம்பவம் நம் ஜனநாயகத்தில் ஒரு கரும்புள்ளி, ஆனால் 2024-ல் எதிர்க்கட்சியினரை யார் மதிக்கவில்லை என்பதை நாம் மறக்கக்கூடாது'.