நாட்டில் இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவைகள் நிறுத்தப்பட்டு பயணிகள் அவதியடைந்துள்ள நிலையில் மன்னிப்பு கேட்டு அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
நாட்டின் மிகப் பெரிய விமானப் போக்குவரத்து நிறுவனமான இண்டிகோ, கடந்த சில நாள்களாக விமான சேவை ரத்து, விமான தாமதம் எனப் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது. அந்த நிறுவனம் நாளொன்றுக்கு 2,200-க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்கும் நிலையில், கடந்த டிசம்பர் 2 அன்று சுமார் 1,400 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. தில்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, சென்னை என நாட்டின் முக்கிய நகரங்களில், 700-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் அவதி அடைந்து வருவது மட்டுமன்றி விமான நிலையங்களில் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவானது.
இந்நிலையில், சூழ்நிலையை விரைவில் சரி செய்வதாக அறிவித்துள்ள இண்டிகோ நிறுவனம், பயணிகளிடம் மன்னிப்பு கோரி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
“வாடிக்கையாளர் ஒவ்வொருவரிடமும் நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். கடந்த சில நாள்களாக பயணிகள் எதிர்கொண்ட கடினமான சூழலை நாங்கள் புரிந்துகொள்கிறோம். அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். இது ஒரே இரவில் சரி செய்யப்பட வாய்ப்பில்லை என்றாலும், எங்களால் முடிந்தவரை உதவிகரமாக இருக்கவும், விரைவில் இந்தப் பிரச்னைகளை சரி செய்துவிடுவோம் என்றும் உறுதியளிக்கிறோம். இன்று மட்டும் அதிகளவில் இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எங்கள் அமைப்புகளை மறுசீரமைக்கும் நோக்கிலும் எங்கள் அட்டவணைகளை மாற்றி அமைக்கும் எண்ணத்திலும் இது நடத்தப்பட்டிருக்கிறது. விமானப் போக்குவரத்துத்துறை மற்றும் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்துடன் இணைந்து எங்கள் விமான சேவைகளை வழக்கம்போல் இயக்குவதில் மும்முரம் காட்டி வருகிறோம். அதன் காரணமாகவே குறுகிய கால விமான ரத்துகளைச் செய்துள்ளோம்.
இதன்மூலம் சில முக்கிய தகவல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம். ரத்து செய்யப்பட்ட அனைத்து விமானங்களின் பயணச்சீட்டு கட்டணத்தை நாங்கள் முழுமையாகத் திருப்பிக் கொடுத்து விடுகிறோம். டிசம்பர் 5 முதல் 15 வரையிலான காலகட்டத்தில் பயணச் சீட்டுகளை ரத்து செய்யவோ, திட்டத்தை மாற்றி அமைக்கவோ விரும்பும் பயணிகளுக்கும் முழுமையாகப் பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுகிறோம். விமான நிலையங்களில் காத்திருக்கும் பயணிகளுக்கு உணவு மற்றும் சிற்றுண்டி வழங்கப்படுவதை உறுதி செய்கிறோம். மூத்த குடிமக்களுக்கு தங்குமிட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தங்கள் விமானம் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக எங்களிடமிருந்து தகவல் வரப்பெற்றால் விமான நிலையத்திற்கு வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். எங்கள் விமான சேவை தொடர்பான உடனடி விவரங்களை எங்கள் வலைத்தளத்தில் உள்ள செயற்கை நுண்ணறிவு செயலி மூலம் பெற்றுக் கொள்ளலாம். தற்போது நிலவும் சூழல் விரைவில் சரிசெய்யப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
IndiGo has issued a statement apologizing for the inconvenience caused to passengers by the suspension of its flight services in the country.