இந்தியா

இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை நிலை பாகிஸ்தானை விட இருமடங்கு அதிகம்: ராகுல் காந்தி

பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்புகளில் பூடான் மற்றும் வங்கதேசத்தைவிட இந்தியா மோசமாகச் செயல்படுகிறது என்றும் ராகுல் காந்தி கூறினார்.

கிழக்கு நியூஸ்

இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் பாகிஸ்தானை விட இரு மடங்காக உள்ளது என்றும், பிரதமர் நரேந்திர மோடியின் மோசமான நிதிக் கொள்கைகளால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை கூறினார்.

பொருளாதார மற்றும் வேலைவாய்ப்பு முன்னணிகளில் பூட்டான் மற்றும் பங்களாதேஷை விட இந்தியா மோசமாகச் செயல்படுகிறது என்றும் ராகுல் காந்தி கூறினார்.

ஒற்றுமைக்கான நடைப்பயணத்தில் மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில் பொதுமக்களிடையே ராகுல் காந்தி உரையாற்றினார்.

அவர் பேசியதாவது:

"நாடு பல முனைகளில் அநீதியை எதிர்கொள்கிறது. பொருளாதார மற்றும் சமூக அநீதி உள்ளது. விவசாயிகள் அநீதியை எதிர்கொள்கின்றனர். கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான வேலைவாய்ப்பின்மை நிலையை நம் நாடு சந்தித்து வருகிறது.

இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை விகிதம் பாகிஸ்தானை விட இரு மடங்காகும். இந்தியாவில் 23 சதவீத இளைஞர்களும், பாகிஸ்தானில் 12 சதவீத இளைஞர்களும் வேலையில்லாமல் உள்ளனர். நம் வேலையின்மை விகிதம் பூடான் மற்றும் வங்கதேசத்தைவிட அதிகமாக உள்ளது.

பிரதமர் மோடி அமல்படுத்திய ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளால் நாட்டில் உள்ள சிறு, குறு தொழில்கள் அழிந்துவிட்டன" என்றார் அவர்.

2022 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட உலக வங்கியின் அறிக்கையின்படி, இந்தியாவில் இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 23.22 சதவீதமாக உள்ளது. இது அதன் அண்டை நாடுகளான பாகிஸ்தான் (11.3 சதவீதம்) மற்றும் வங்கதேசம் (12.9 சதவீதம்) ஆகியவற்றை விட அதிகமாகும்.

நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த பாஜக தலைமையிலான மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி, பல முக்கிய துறைகளில் வணிகங்களின் உரிமை பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் கைகளில் இல்லை என்றும், இந்த உண்மை பொது வெளியில் வருவதை அரசாங்கம் விரும்பவில்லை என்றும் கூறினார்.