இந்தியா

நடப்பு நிதியாண்டின் 3-ம் காலாண்டு: பொருளாதார வளர்ச்சி 6.2%

முந்தையக் காலாண்டைக் காட்டிலும் இது அதிகம். ஆனால்...

கிழக்கு நியூஸ்

2024-25 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 6.2 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

உற்பத்தி மற்றும் சுரங்கத் துறையில் கண்ட சரிவு காரணமாக பொருளாதார வளர்ச்சி சரிவைக் கண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) அக்டோபர் - டிசம்பர் 2024-ல் (நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டு) 6.2 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது. முந்தையக் காலாண்டைக் காட்டிலும் இது அதிகம். கடந்த நிதியாண்டின் இதே மூன்றாவது காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.5 சதவீதமாக இருந்தது.

நடப்பு நிதியாண்டில் இரண்டாவது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 5.6 சதவீதமாக இருந்தது. நடப்பு நிதியாண்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதம் என்ற வேகத்தில் விரிவடையும் என தேசிய புள்ளியியல் அலுவலகம் கணித்துள்ளது. இதுவே 6.6 சதவீதமாக இருக்கும் என மத்திய ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.

கடந்த மாதம் தேசிய புள்ளியியல் அலுவலகம் கணித்திருந்தபோது, பொருளாதார வளர்ச்சி 6.4 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டிருந்தது. அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதமாக இருக்கும் என மத்திய ரிசர்வ் வங்கி கணித்திருந்தது. அதைக் காட்டிலும் இது குறைவு.

முன்னதாக, 2023-24 நிதியாண்டில் 8.2 சதவீதமாகக் கணிக்கப்பட்டிருந்த பொருளாதார வளர்ச்சியானது பிறகு 9.2 சதவீதமாக மாற்றி மதிப்பீடு செய்யப்பட்டது.