ANI
இந்தியா

146 கோடியை எட்டிய இந்திய மக்கள்தொகை: ஐநா அறிக்கை

நாட்டின் மொத்த கருவுறுதல் விகிதம் குறைந்துள்ளது.

ராம் அப்பண்ணசாமி

இந்திய மக்கள்தொகை 146 கோடியை எட்டியுள்ளது என்றும், இதன் மூலம் உலகிலேயே மிக அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட நாடு என்ற அந்தஸ்தை இந்தியா தொடர்ந்து தக்க வைத்துள்ளது என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் புதிய மக்கள்தொகை அறிக்கை தகவல் தெரிவித்துள்ளது.

அதேநேரம் இந்தியாவின் மொத்த கருவுறுதல் விகிதம், மாற்று நிலை கறுவுறுதல் விகிதத்தைவிடக் குறைந்துள்ளது என்பதையும், உலகளவில் கோடிக்கணக்கான மக்களால் தங்களின் உண்மையான கருவுறுதல் இலக்குகளை அடையமுடியவில்லை என்பதையும் ஐநாவின் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மக்கள்தொகை நிதியம் (UNFPA) வெளியிட்ட உலக மக்கள்தொகை நிலை அறிக்கை 2025-ல் குறிப்பிடப்பட்டுள்ள `உண்மையான கருவுறுதல் நெருக்கடி’ என்ற கருத்தாக்கம், கருவுறுதல் குறைந்து வருவதால் ஏற்படும் பீதி மீது இருக்கும் கவனத்தை, இன்னும் அடையப்படாத இனப்பெருக்க இலக்குகளை எட்டுவதன் மீது வைக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவின் மொத்த கருவுறுதல் விகிதம், சராசரியாக ஒரு பெண்ணுக்கு 1.9 (குழந்தை) பிறப்புகளாக குறைந்துள்ளதாகவும், இது 2.1 என்ற மாற்று நிலை கறுவுறுதல் அளவைவிடக் குறைவாக இருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இடப்பெயர்வு இல்லாமல், சராசரியாக ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு மக்கள்தொகை அளவைப் பராமரிக்கத் தேவையானதைவிட குறைவான குழந்தைகளையே இந்தியப் பெண்கள் பெற்று வருகின்றனர் என்பதே இதன் பொருளாகும்.

அதேநேரம், நாட்டில் பிறப்பு விகிதம் குறைந்து வந்தாலும், இளைஞர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது என்ற தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த மக்கள்தொகையில், 0-14 வயதுக்குட்பட்டவர்களில் 24% பேரும், 10-19 வயதுக்குட்பட்டவர்களில் 17% பேரும், 10-24 வயதுக்குட்பட்டவர்களில் 26% பேரும் இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட மதிப்பீடுகளின்படி, இந்தியாவின் தற்போதைய மக்கள் தொகை 1.46 கோடியாக உள்ளது.

இதில், முதியோர் மக்கள்தொகை (65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்) தற்போது 7% ஆக உள்ளது. மனிதர்களின் ஆயுட்காலம் மேம்பட்டு வருவதால், இனி வரும் தசாப்தங்களில் இந்த விகிதம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.