தெலங்கானாவிலிருந்து மெக்காவுக்குப் புனிதப் பயணம் மேற்கொண்ட 45 பேர் சௌதி அரேபியாவில் பேருந்து விபத்தில் உயிரிழந்துள்ளார்கள்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாதிலிருந்து மெக்காவுக்குப் புனித பயணம் மேற்கொள்ள ஒரு குழுவினர் சௌதி அரேபியா சென்றுள்ளார்கள். இவர்கள் மெக்காவில் பிரார்த்தனை மேற்கொண்டு மதீனாவுக்குப் பேருந்து மூலம் வந்துள்ளார்கள். வரும் வழியில் டீசல் லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளாகியிருக்கிறது. டீசல் லாரி மீது மோதியதில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததாகத் தெரிகிறது. இதில் பேருந்தில் இருந்த 46 பேரில் 45 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஹைதராபாத் காவல் ஆணையர் விசி சஜ்ஜனர் விபத்து குறித்த விவரங்களை வெளியிட்டார்.
"45 பேர் உயிரிழந்துள்ளார்கள். ஒருவர் மட்டும் உயிர் பிழைத்துள்ளார். உயிர் பிழைத்தவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
இவர்களுடைய புனிதப் பயணம் நவம்பர் 9 முதல் நவம்பர் 23 வரை திட்டமிடப்பட்டிருந்தது. மொத்தம் 54 பேர் பயணம் மேற்கொண்டிருக்கிறார்கள். 4 பேர் கார் மூலம் மதீனாவுக்குச் சென்றிருக்கிறார்கள். மேலும் 4 பேர் மெக்காவிலேயே தங்கியிருக்கிறார்கள். மீதமுள்ள 46 பேர் பேருந்தில் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்.
மதீனாவிலிருந்து 25 கி.மீ தொலைவில் விபத்து நேர்ந்துள்ளது. முஹமது அப்துல் சுயாப் மட்டும் உயிர் பிழைத்துள்ளார். இவர் சௌதி ஜெர்மன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர்களின் உடல்கள் உள்ளூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளன" என்றார்.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உதவும் வகையில் அம்மாநில தலைமைச் செயலகத்தில் சிறப்புக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. ரியாத் மற்றும் ஜெட்டாவிலுள்ள இந்திய தூதரகம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு முழு உதவியை வழங்கி வருவதாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டி பிரார்த்திப்பதாக எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்தவர்களின் உடலை விரைவில் இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்று குடும்பத்தினர் வேண்டுகோள் வைத்துள்ளார்கள்.
Relatives of the people who met with an accident after a bus travelling from Mecca to Medina in Saudi Arabia caught fire on Monday, asked the Centre and the Telangana government to arrange for their travel to Saudi Arabia and bring back the bodies.
Indian Pilgrims | Telangana | Bus Accident | Saudi Arabia | Mecca | Medina |