இந்தியா

இனி குறைந்தபட்ச இருப்புத் தொகை தேவையில்லை: இந்தியன் வங்கி

பஞ்சாப் நேஷனல் வங்கி கடந்த ஜூலை 1 முதல் இதை நடைமுறைக்கு கொண்டு வருவதாக அறிவித்தது.

கிழக்கு நியூஸ்

சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பராமரிக்காவிட்டால் ஜூலை 7 முதல் அபராதம் விதிக்கப்படாது என இந்தியன் வங்கி அறிவித்துள்ளது.

இந்தியன் வங்கியில் மாணவர்கள் முதல் மூத்த குடிமக்கள் வரை சிறுதொழில் செய்பவர்கள் முதல் கிராமப்புற நுகர்வோர் வரை பலரும் கணக்கு வைத்துள்ளார்கள். வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக உதவும் வகையில், குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படாது என்ற அறிவிப்பை இந்தியன் வங்கி வெளியிட்டுள்ளது. ஜூலை 7 முதல் இது நடைமுறைக்கு வருகிறது.

சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் வங்கி அணுகக்கூடிய வகையிலும் மலிவானதாகவும் இருக்க வேண்டும் எனும் நோக்கில் இந்தியன் வங்கி இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

கனரா வங்கி ஏற்கெனவே இந்த அறிவிப்பை வெளியிட்டு நடைமுறைப்படுத்தி வருகிறது. பஞ்சாப் நேஷனல் வங்கி கடந்த ஜூலை 1 முதல் இதை நடைமுறைக்கு கொண்டு வருவதாக அறிவித்தது. இந்த வரிசையில் மூன்றாவது வங்கியாக இந்தியன் வங்கி இதனை அறிவித்துள்ளது.