ANI
இந்தியா

ஜம்மு காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இந்திய ராணுவ அதிகாரி பலி

ராம் அப்பண்ணசாமி

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் டோடா மாவட்டத்தில் உள்ள அஸ்ஸார் பகுதியில் இன்று (ஆகஸ்ட் 14) காலை தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நம்பத்தகுந்த ரகசியத் தகவலை அடுத்து, டோடா மாவட்டத்தின் அஸ்ஸார் பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளைத் தேடும் முயற்சியில் நேற்று இந்திய ராணுவமும், ஜம்மு காஷ்மீர் காவல்துறையினரும் இறங்கினார்கள். இதைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.

இதில் இராணுவம் சார்பாக துப்பாக்கிச் சூட்டை முன்னெடுத்துச் சென்ற கேப்டன் நிலையில் இருந்த ராணுவ அதிகாரிக்குக் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார். இந்த துப்பாக்கிச் சூட்டில் அந்த பகுதியில் உள்ள ஹிர்னி கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 12-ல் இருந்து டோடா மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் தீவிரவாதிகளுடன் 6-க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதில் 4 ராணுவத்தினரும், 3 தீவிரவாதிகளும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் அதிகரித்து வரும் தீவிரவாத சம்பவங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள தில்லியில் இன்று காலை உயர்மட்ட கூட்டத்தை நடத்தினார் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங். இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ராணுவத் தளபதி உபேந்திர திவேதி, மத்திய பாதுகாப்பு செயலர் ஆகியோர் பங்கேற்றனர்.