தமிழ்நாட்டின் வனப் பரப்பில் சுமார் 31 சதுர கி.மீ. அதிகரித்துள்ளதாக சமீபத்தில் வெளியான 2023-ம் ஆண்டுக்கான இந்திய வன நிலை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிச. 21-ல் உத்தரகண்ட் மாநிலம் டெஹ்ராடூனில் உள்ள வன ஆராய்ச்சி நிறுவனத்தில் வைத்து 2023-ம் ஆண்டுக்கான இந்திய வன நிலை அறிக்கையை வெளியிட்டார் மத்திய சுற்றுசூழல், வன, காலநிலை மாற்ற அமைச்சர் பூபேந்தர் யாதவ். செயற்கைக் கோள் தரவுகள், கள ஆய்வுகள் அடிப்படையில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்திய வன நிலை அறிக்கை வெளியிடப்படுகிறது.
கடைசியாக, கடந்த 2021-ல் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. இதன்படி, கடந்த அறிக்கையை ஒப்பிடும்போது தற்போதைய அறிக்கையில் தமிழ்நாட்டின் வனப்பரப்பில் சுமார் 31 சதுர கி.மீ. அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பரப்பளவு 1,30,060 சதுர கி.மீ. ஆகும். கடந்த 2021 அறிக்கையின்படி இதில் சுமார் 26,419 சதுர கி.மீ. வனப் பரப்பாக (மரங்கள் உள்ளிட்ட) இருந்தது. இந்நிலையில், தற்போதைய அறிக்கையின்படி இது 26,450.22 சதுர கி.மீ ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் வனப் பரப்பில் சுமார் 30.99 சதுர கி.மீ. அதிகரித்துள்ளது.
தமிழகத்தின் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் வனப்பரப்பு 20.34 சதவீதமாக உள்ளது. மத்திய பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், மஹாராஷ்டிரம் ஆகியவை மிகப்பெரிய அளவிலான வனப்பரப்பைக் கொண்ட முதல் மூன்று மாநிலங்களாகும். மேலும் 2021-ம் ஆண்டை ஒப்பிடும்போது நாட்டின் வனப்பரப்பு (மரங்கள் உள்ளிட்ட) தற்போது 1445 சதுர கி.மீ. அதிகரித்துள்ளது.