இந்தியா

இந்திய வான்பரப்பில் நுழைய பாகிஸ்தான் விமானங்களுக்குத் தடை!

பாகிஸ்தான் ராணுவ விமானங்களின் தடங்காட்டிகளை செயலிழக்க வைக்கும் வகையில், பாகிஸ்தானுடனான இந்தியாவின் மேற்கு எல்லையில் ஜாமர் கருவிகள் பொறுத்தப்பட்டுள்ளன.

ராம் அப்பண்ணசாமி

இந்திய வான்பரப்பில் பாகிஸ்தான் விமானங்கள் பறக்க மத்திய அரசு விதித்துள்ள தடை நேற்று (ஏப்.30) முதல் அமலுக்கு வந்தது. வரும் மே 24-ம் தேதி காலை 5.29 மணி வரை இந்த தடை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் பதிவுசெய்யப்பட்ட விமானங்கள், பாகிஸ்தானைச் சேர்ந்த நிறுவனங்களால் இயக்கப்படும் அல்லது குத்தகைக்கு எடுக்கப்பட்ட விமானங்கள், பாகிஸ்தான் இராணுவ விமானங்கள் ஆகியவை இந்திய வான்பரப்பில் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடையை மீறி இந்திய வான்பரப்பில் நுழையும் பாகிஸ்தான் ராணுவ விமானங்களின் தடங்காட்டிகளை (navigation systems) செயலிழக்க வைக்கும் வகையில், பாகிஸ்தானுடனான இந்தியாவின் மேற்கு எல்லையில் ஜாமர் கருவிகள் பொறுத்தப்பட்டுள்ளன. இந்த ஜாமர் கருவிகளால் ஜிபிஎஸ், குளோனாஸ், பெய்டோ உள்ளிட்ட அனைத்து விதமான தடங்காட்டிகளையும் செயலிழக்க வைக்க முடியும் என்று கூறப்படுகிறது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு, பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து, வாகா-அட்டாரி எல்லைப் பகுதி மூடல் போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தது. இதன் தொடர்ச்சியாக தற்போது இந்திய வான்பரப்பில் பாகிஸ்தான் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் இந்த நடவடிக்கையால் 32 விமானங்களைக் கொண்ட பாகிஸ்தான் இண்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனம் கடுமையாக பாதிப்படையும் என்று கூறப்படுகிறது.

தென்கிழக்கு மற்றும் கிழக்காசிய நாடுகளுக்குச் செல்லும் இந்த நிறுவனத்தின் விமானங்கள் சீனா அல்லது இலங்கை வான்பரப்பு வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும் பட்சத்தில் பயண நேரம் நீட்டிக்கப்பட்டு, எரிபொருள் பயன்பாடும் அதிகரிக்கும். இதனால் பயணச்சீட்டுகளின் கட்டணம் உயர்ந்து, பயணிகள் பாதிக்கப்படுவார்கள்.