இந்தியா

ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் மீண்டும் திறக்கப்படும்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் | Jaishankar |

இந்தியா எங்களது நெருங்கிய நண்பர் என்று ஆப்கன் அமைச்சர் நெகிழ்ச்சி....

கிழக்கு நியூஸ்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இந்தியா மீண்டும் தூதரகத்தைத் திறக்கும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ல் தாலிபன் அமைப்பு ஆட்சியைப் பிடித்தது. இதையொட்டி நடந்த கலவரத்தின்போது ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்த இந்திய தூதரகம் மூடப்பட்டது. அதன்பின் இன்றுவரை ஆப்கன் நாட்டின் தாலிபன் அரசை இந்தியா அங்கீகரிக்கவில்லை. இந்நிலையில், இரு உறவுகளையும் சீராக்கும் விதமாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முத்தாகி, 6 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். வெளிநாடுகளுக்குச் செல்ல அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஐநா பாதுகாப்பு அமைப்பிடமிருந்து சிறப்பு ஒப்புதல் பெற்று இந்தியா வந்துள்ளார்.

இதையடுத்து, தில்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை இன்று அவர் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது, இருநாட்டு உறவை வலுப்படுத்துவது குறித்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்பின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது:-

ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் மீண்டும் திறக்கப்படும் என்பதைப் பெருமையுடன் அறிவிக்கிறேன். ஆப்கானிஸ்தானின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரத்தின் மீது இந்தியா அர்ப்பணிப்புடன் உள்ளது. இந்தியாவின் ஒத்துழைப்பு ஆப்கானிஸ்தானின் வளர்ச்சிக்கும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கும் உறுதுணையாக இருக்கும். ஆப்கானிஸ்தானில் சுரங்கப் பணிகளில் உள்ள வாய்ப்புகள் குறித்து இந்திய நிறுவனங்கள் ஆய்வு நடத்த அழைப்பு விடுத்திருப்பதைப் பாராட்டுகிறேன். இதுகுறித்து விரிவாக விவாதிக்கப்படும். இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் மற்றும் தொழில்துறையை வலுப்படுத்தும் ஒருங்கிணைந்த எண்ணங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆப்கானிஸ்தானில் இருந்து தில்லிக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஆப்கானிஸ்தானுக்கு இந்தியாவின் மனிதாபிமான உதவிகள் தொடரும். ” என்று பேசினார்.

அதன்பின் பேசிய ஆப்கன் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர்கான் முத்தாகி, “தில்லிக்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது இந்தியப் பயணம் இரு நாடுகளுக்கு இடையிலான புரிதலை அதிகரிக்கும். இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான பரிமாற்றங்கள் மேலும் வலுப்பெற வேண்டும். எங்கள் நிலத்தை எந்த நாட்டுக்கும் எதிரான பயங்கரவாதத்திற்கு பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம். இந்தியா எங்களது நெருங்கிய நண்பர். சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் சமயத்தில் இந்தியா பேருதவிகளைச் செய்திருக்கிறது. இரு நாடுகளுக்கு இடையிலான உறவு பரஸ்பர மரியாதை, வர்த்தகம் மற்றும் மக்களுடனான உறவுகளின் அடிப்படையில் அமைத்திருக்கிறது” என்றார்.

இருதரப்புப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக ஆப்கானிஸ்தானுக்கு 20 ஆம்புலன்ஸ்களை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஆப்கன் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முத்தாகியிடம் ஒப்படைத்தார்.