அருணாச்சலப் பிரதேசம் - கோப்புப்படம் ANI
இந்தியா

பெயரிடுதல் யதார்த்தத்தை மாற்றாது: சீனாவின் நடவடிக்கையை நிராகரித்த இந்தியா!

அருணாச்சலப் பிரதேசம் அன்றும், இன்றும், என்றும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை, இதுபோன்ற பெயர் மாற்ற நடவடிக்கைகளால் மாற்றிவிட முடியாது.

ராம் அப்பண்ணசாமி

அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் பல்வேறு இடங்களின் பெயரை மாற்ற சீன அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை இந்தியா கடுமையாக கண்டித்துள்ளது. மேலும், அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே உள்ளது என்ற கருத்தை இந்தியா வலியுறுத்தியுள்ளது.

மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில், `இந்திய மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களுக்குப் பெயரிட சீனா தொடர்ந்து வீணாகவும், அபத்தமான வகையிலும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதை நாங்கள் கவனித்து வருகிறோம்.

கொள்கை ரீதியான எங்களின் நிலைப்பாட்டிற்கு இணங்க, அத்தகைய முயற்சிகளை நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம். அருணாச்சலப் பிரதேசம் அன்றும், இன்றும், என்றும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதையும், இந்தியாவில் இருந்து அது பிரிக்கவே முடியாத பகுதி என்பதையும், இதுபோன்ற பெயர் மாற்ற நடவடிக்கைகளால் மாற்றிவிட முடியாது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை (LAC) ஒட்டி அமைந்துள்ள 30 இடங்களின் புதிய பெயர்களைக் கொண்ட பட்டியலை கடந்த ஏப்ரல் 2024-ல் சீனா வெளியிட்டது. இந்திய எல்லைக்கு உள்பட்ட இடங்களுக்கு சீனா மறுபெயரிட முயற்சி செய்தது இது முதல்முறை அல்ல.

2017-ம் ஆண்டில், அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஆறு இடங்களுக்கான புதிய பெயர் பட்டியலை சீனா முதல்முறையாக வெளியிட்டது. இதைத் தொடர்ந்து 2021-ம் ஆண்டில் 15 இடங்களுக்கான 2-வது பட்டியலும், 2023-ல் கூடுதலாக 11 இடங்களுக்கான 3-வது பெயர்ப் பட்டியலையும் சீனா வெளியிட்டது.