நடப்பு மாத இறுதியில் அஞ்சல் சேவைக்கான அமெரிக்க வரி விதிப்பில் அமலுக்கு வரும் மாற்றங்களைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 25 முதல் அமெரிக்காவிற்கு அஞ்சல் வழியாக அனுப்பப்படும் பெரும்பாலான பார்சல்களை ஏற்றுக்கொள்வதை தற்காலிகமாக நிறுத்துவதாக இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ளது.
800 அமெரிக்க டாலர்கள் வரையிலான மதிப்புடைய பொருட்களுக்கான வரி விலக்கு உத்தரவை திரும்பப் பெறுவதாக கடந்த ஜூலை 30 அன்று அமெரிக்கா புதிய உத்தரவு பிறப்பித்தது.
ஆகஸ்ட் 29 முதல், அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் அனைத்து அஞ்சல் பொருள்களும், அவற்றின் மதிப்பைப் பொருட்படுத்தாமல், சர்வதேச அவசர பொருளாதார ஆற்றல் சட்டத்தின் (IEEPA) கீழ் சுங்க வரிகளுக்கு உட்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் 100 அமெரிக்க டாலர்கள் வரையிலான மதிப்புடைய பரிசுப் பொருட்களுக்கு மட்டும் சுங்க வரி விதிக்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது.
இதன்படி, 100 அமெரிக்க டாலர்கள் வரையிலான மதிப்புள்ள கடிதங்கள், ஆவணங்கள் மற்றும் பரிசுப் பொருள்கள் தவிர்த்து, ஆகஸ்ட் 25 முதல் அமெரிக்காவிற்கு பார்சல்கள் முன்பதிவு செய்வதை இந்திய அஞ்சல் துறை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
இந்த புதிய நடைமுறையின் கீழ் அனுப்ப முடியாத பார்சல்களுக்கு ஏற்கனவே முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள், அதற்கான அஞ்சல் கட்டணத்தைத் திரும்பப் பெறலாம் என்று அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.
`வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு அஞ்சல் துறை ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவிக்கிறது மற்றும் அமெரிக்காவிற்கான முழுமையான சேவைகளை விரைவில் மீண்டும் தொடங்க அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன என்று உறுதியளிக்கப்படுகிறது,’ என அஞ்சல் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியா மட்டுமல்லாமல், நார்வே, ஸ்வீடன், ஃபின்லாந்து, ஆஸ்திரியா, பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளும் அமெரிக்காவிற்கான பார்சல் சேவையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.