ANI
இந்தியா

ஆபரேஷன் சிந்தூர்: ஜெய்ஷ்-இ-முகமது நிறுவனர் மசூத் அஸாரின் குடும்பத்தினர் 10 பேர் பலி!

லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது, ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்புகளின் 9 தீவிரவாத முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன.

ராம் அப்பண்ணசாமி

இந்திய பாதுகாப்புப் படைகள் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் நிறுவனர் மசூத் அஸாரின் குடும்பத்தினர் 10 பேர் பலியாகியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய பயங்கரவாத அமைப்புகளின் 21 முகாம்கள் செயல்பட்டு வருகின்றன.

இவற்றில் சாவய் நாலா, சைத்னா பிலால், மஸ்கர் ரஹீல் ஷாஹித், மஸ்ஜித் அப்பாஸ் கோட்லி, பா்னாலா, மெஹ்மூனா ஜோயா, சர்ஜல், மார்காஸ் தைபா, மார்கஸ் சுபானல்லா ஆகிய 9 முகாம்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றை ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா வான்வழி தாக்குதல் மூலம் குறிவைத்து தகர்த்துள்ளது.

பஹாவல்பூரில் உள்ள மார்கஸ் சுபானல்லா பயங்கரவாத முகாம் மீது இந்தியா நடத்திய தாக்குதலில் தன் குடும்பத்தைச் சேர்ந்த 10 நபர்களும், உதவியாளர்கள் 4 பேரும் கொல்லப்பட்டதாக ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் தெரிவித்ததாக பிபிசி உருது செய்தி வெளியிட்டுள்ளது.

குறிப்பாக அசாரின் மூத்த சகோதரி, சகோதரியின் கணவர், அவரது மருமகன், மருமகனின் மனைவி, மற்றொரு மருமகள் ஆகிய ஐவரும், அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து குழந்தைகளும் கொல்லப்பட்டுள்ளனர்.

அத்துடன், அசாரின் நெருங்கிய உதவியாளர், உதவியாளரின் தாயார் மற்றும் இரண்டு நெருங்கிய கூட்டாளிகள் ஆகியோரும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.