இந்தியா

ஜார்க்கண்டில் 70 தொகுதிகளில் காங்கிரஸ் - ஜேஎம்எம் போட்டி

ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் இடதுசாரிகளுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.

சுவாமிநாதன்

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) இணைந்து 70 தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாக அந்த மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார்.

ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் இடதுசாரிகளுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிரம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. 81 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட ஜார்க்கண்டுக்கு நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 23-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொகுதிப் பங்கீடு ஏற்கெனவே இறுதியாகிவிட்டது.

பாஜக 68 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அனைத்து ஜார்க்கண்ட் மாணவர்கள் சங்கம் (ஏஜேஎஸ்யு) 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஐக்கிய ஜனதா தளம் 2 தொகுதிகளில் போட்டியிடுகிறது. லோக் ஜனஷக்தி 1 தொகுதியிலும் போட்டியிடுகிறது.

இதைத் தொடர்ந்து, இண்டியா கூட்டணியின் தொகுதிப் பங்கீடும் இறுதியாகியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்துக்கான காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் குலாம் அஹமது மிர் உடன் இருக்க, ஹேமந்த் சோரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

"ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி இணைந்து போட்டியிடுகிறது. காங்கிரஸ் மற்றும் ஜேஎம்எம் மொத்தம் 70 தொகுதிகளில் போட்டியிடுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகுதிகள் குறித்து ஆலோசனை நடத்தப்படும்" என்றார்.

2019 சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 43 இடங்களிலும் காங்கிரஸ் 31 இடங்களிலும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் 7 இடங்களிலும் போட்டியிட்டன. இதில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 47 இடங்களிலும் பாஜக 25 இடங்களிலும் வெற்றி பெற்றன.