அகிலேஷ் யாதவுடன் மல்லிகார்ஜுன கார்கே 
இந்தியா

மோடியை வழியனுப்பிவைக்க மக்கள் தயாராகிவிட்டார்கள்: கார்கே

கிழக்கு நியூஸ்

மக்களவைத் தேர்தலில் நான்கு கட்ட வாக்குப்பதிவுக்குப் பிறகு இண்டியா கூட்டணி வலுவான நிலையில் இருப்பதாக காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவுடன் இணைந்து கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தார் மல்லிகார்ஜுன கார்கே.

"நாட்டில் நான்கு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இண்டியா கூட்டணி மிகவும் வலுவான நிலையில் உள்ளது. மக்கள் நரேந்திர மோடியை வழியனுப்பிவைக்கத் தயாராகிவிட்டார்கள் என்பதை முழு நம்பிக்கையுடன் தெரிவிப்பேன். ஜூன் 4-ம் தேதி இண்டியா கூட்டணி புதிய அரசை அமைக்கவுள்ளது.

அரசியலமைப்பை மாற்ற வேண்டும் என முதலில் மோகன் பாகவத் பேசினார். அரசியலமைப்பை மாற்ற மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை தேவை என கர்நாடகத்தில் கூறப்பட்டது. உத்தரப் பிரதேசத்தில் பாஜகவைச் சேர்ந்த பலர் அரசியலமைப்பை மாற்றுவது குறித்து பேசுகிறார்கள்.

மோடி அமைதி காப்பது எனக்கு ஆச்சர்யமளிக்கிறது. வலிமை மற்றும் 56 இஞ்ச் மார்பு குறித்துப் பேசுகிறார். அரசியலமைப்பை மாற்றுவோம் என்று பேசுபவர்களை ஏன் கட்சியிலிருந்து நீக்கவில்லை?

இண்டியா கூட்டணி ஆட்சியமைத்தால் ஏழைகளுக்கு மாதந்தோறும் 10 கிலோ இலவச ரேஷன் பொருள்கள் வழங்கப்படும்" என்றார் மல்லிகார்ஜுன கார்கே.

தேர்தல் பேரணியில் பேசும்போது, உத்தரப் பிரதேசத்திலுள்ள 80 தொகுதிகளில் 79 தொகுதிகளில் இண்டியா கூட்டணி வெற்றி பெறும் என்றார் அகிலேஷ் யாதவ்.