இந்தியா

திரிபுரா அத்துமீறல் சம்பவம்: இந்திய-வங்கதேச எல்லையில் கண்காணிப்பு தீவிரம்!

இந்த விவகாரம் தொடர்பாக நியூ கேபிடல் காம்பிளக்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு 7 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

ராம் அப்பண்ணசாமி

வங்கதேசத்தில் அதிகரித்துவரும் பதற்றத்தால் திரிபுராவில் உள்ள இந்திய-வங்கதேச எல்லைப் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தி கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது எல்லைப் பாதுகாப்புப் படை.

ஹிந்துக்கள், கிருஸ்துவர்கள் என வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையின மக்கள் சமீபகாலமாக குறிவைத்துத் தாக்கப்படுகின்றனர். இதன் தொடர்ச்சியாக கடந்த வாரம் வங்கதேசத்தைச் சேர்ந்த ஹிந்து துறவியான சின்மொய் கிருஷ்ணதாஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த விவகாரங்களை முன்வைத்து இந்திய அரசு கண்டனத்தைப் பதிவு செய்தது.

இந்நிலையில், வங்கதேசத்தில் உள்ள ஹிந்துக்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து, திரிபுரா தலைநகர் அகர்தலாவில் உள்ள வங்கதேச துணைத் தூதரகம் முன்பு ஹிந்து சங்கர்ஷ் சமிதி அமைப்பினர் கடந்த திங்கட்கிழமை போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள் சிலர் துணைத் தூதரகத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்றனர்.

இருப்பினும் அங்கிருந்த பாதுகாப்புப் படையினரால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனை அடுத்து இந்த விவகாரம் தொடர்பாக நியூ கேபிடல் காம்பிளக்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு 7 நபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த அத்துமீறல் சம்பவம் தொடர்பாக வங்கதேசத்துக்கான இந்திய தூதர் பிரனெய் வர்மாவை அழைத்து கண்டனத்தைப் பதிவு செய்தது வங்கதேச வெளியுறவு அமைச்சகம்.

வடகிழக்கு மாநிலமான திரிபுரா வங்கதேசத்துடன் சர்வதேச எல்லைக் கொண்டுள்ளது. இதன் அடிப்படையில் வங்கதேசத்தில் தற்போது நிலவிவரும் பதற்றமான சூழலைக் கருத்தில்கொண்டு அந்நாட்டுடன் திரிபுராவில் உள்ள எல்லைப்பகுதியில் பாதுகாப்பைப் பலப்படுத்தி கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது எல்லைப் பாதுகாப்புப் படை.