புதிய தொழிலாளர் சட்டத்திற்கு எதிர்ப்பு: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் போராட்டம் 
இந்தியா

புதிய தொழிலாளர் சட்டத்திற்கு எதிர்ப்பு: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் போராட்டம் | Labour Laws |

“கார்ப்ரேட் காட்டாட்சி வேண்டாம்! தொழிலாளர்களுக்கு நீதி வேண்டும்” என்ற பதாகையை ஏந்திப் போராட்டம்

கிழக்கு நியூஸ்

நாடாளுமன்ற வளாகத்தில் புதிய தொழிலாளர் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இண்டியா கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தியாவில் தொழிலாளர் சட்டங்களில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, ஊதிய விதி 2019, தொழில்துறை தொடர்பு விதி 2020, சமூகப் பாதுகாப்பு விதி 2020 மற்றும் பணிப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணிசூழல் விதி 2020 ஆகிய நான்கு சட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்னதாக 29 தொழிலாளர் சட்டங்கள் இருந்தன. அவை நான்காகச் சுருக்கப்பட்டுள்ளன. இது, கடந்த 2020-ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, நவம்பர் 21 முதல் நாட்டில் அமலுக்கு வந்தன. ஆனால், இந்தச் சட்டங்கள் தொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் உள்ளிட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் மூன்றாம் நாள் அமர்வு தொடங்குவதற்கு முன்னதாக இண்டியா கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், புதிய தொழிலாளர் சட்டங்களுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி, போராட்டம் நடத்தினர். அப்போது, கார்ப்ரேட் காட்டாட்சி வேண்டாம், தொழிலாளர்களுக்கு நீதி வேண்டும் என்ற பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினர். இதில், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் குழுத் தலைவர் சோனியா காந்தி, நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்.

கடந்த டிசம்பர் 1 அன்று நாடாளுமன்றம் குளிர்காலக் கூட்டத்தொடருக்காகக் கூடியது. டிசம்பர் 19 வரை நடக்கவுள்ள இந்தக் கூட்டத்தொடரில் 14 முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. ஆனால், நாடாளுமன்றம் தொடங்கிய நாளில் இருந்தே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராகவும், வாக்குத் திருட்டுக் குற்றச்சாட்டை வலியுறுத்தியும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

மேலும் நேற்று (டிச. 2) சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து மக்களவையிலும் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்தி வைக்கப்பட்டது.