இந்தியா

சுய லாபங்களுக்காக வாக்கு இயந்திரம் குறித்து சந்தேகத்தை எழுப்புகிறார்கள்: பிரதமர் மோடி

கிழக்கு நியூஸ்

எதிர்க்கட்சியினர் சுய லாபங்களுக்காக வாக்கு இயந்திரம் குறித்து சந்தேகத்தை எழுப்புவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிஹாரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, விவிபேட் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து பேசினார்.

"ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு அரசியலமைப்பு குறித்தோ, ஜனநாயகம் குறித்தோ எந்தக் கவலையும் இல்லை. பல 10 ஆண்டுகளாக மக்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்காமல் வாக்குச்சாவடியைக் கைப்பற்றுவது சாதாரணமாக இருந்தது. வாக்களிப்பதற்காக மக்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதையே அவர்கள் அனுமதிக்கவில்லை.

நேர்மையான வாக்காளர்களுக்கு வாக்கு இயந்திரம் ஒரு பலமாக இருக்கிறது. வாக்கு இயந்திரத்தை ஒழித்துக்கட்ட எதிர்க்கட்சியினர் முடிந்தளவுக்கு முயற்சித்தார்கள். பழைய வாக்குச் சீட்டு முறைக்கு செல்ல முடியாது என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

ஒட்டுமொத்த உலகமும் இன்று நமது ஜனநாயகத்தையும், தேர்தல் நடைமுறைகளையும், இதற்காகத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதையும் பாராட்டுகிறது. ஆனால், இவர்கள் தங்களுடைய சுய லாபங்களுக்காக வாக்கு இயந்திரம் குறித்து தவறான கருத்துகளைத் தெரிவித்து வந்தார்கள். ஜனநாயகத்துக்குத் துரோகம் இழைக்க இவர்கள் தொடர்ந்து முயற்சித்து வந்துள்ளார்கள். வாக்கு இயந்திரம் குறித்து சந்தேகங்களை எழுப்பியதற்காக எதிர்க்கட்சியினர் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார் பிரதமர் மோடி.

முன்னதாக, வாக்கு இயந்திரத்தில் பதிவாகும் அனைத்து வாக்குகளையும் வாக்கு ஒப்புகைச் சீட்டுடன் ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று காலை தள்ளுபடி செய்தது. வாக்குச் சீட்டு முறைக்கு செல்ல முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.