ANI
இந்தியா

5-ம் கட்டத் தேர்தலில் இண்டியா கூட்டணி முற்றிலுமாகத் தோல்வி: பிரதமர் மோடி

கிழக்கு நியூஸ்

மக்களவைத் தேர்தலுக்கான 5-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில் இண்டியா கூட்டணி முற்றிலுமாகத் தோல்வியடைந்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிஹாரில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

"5-ம் கட்டத் தேர்தலில் இண்டியா கூட்டணி முற்றிலுமாகத் தோல்வியடைந்துவிட்டது. 21-ம் நூற்றாண்டில் இண்டியா கூட்டணியின் பாவங்களைச் சுமந்துகொண்டு இந்தியாவால் முன்னோக்கி செல்ல முடியாது. இதனால்தான், ஒவ்வொரு தேர்தலிலும் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் போன்ற கட்சிகளை மக்கள் கடுமையாகத் தாக்குகிறார்கள்.

60 ஆண்டுகளில் இவர்கள் மாளிகைகள் கட்டி, ஸ்விஸ் வங்கிகளில் கணக்குகளைத் தொடங்கியுள்ளார்கள். வயிற்றை நிரப்ப உணவு இல்லாமல் தவித்து வருவீர்கள். ஆனால், அவர்கள் பணக் கட்டுகளை வீட்டில் அடுக்கி வைத்திருப்பார்கள். உங்களுடையக் குழந்தைகள் படிப்பதற்கு பள்ளிகள் இல்லாமல் இருப்பார்கள். ஆனால், அவர்களுடைய பிள்ளைகள் வெளிநாடுகளில் படிப்பார்கள். ஏழைகள் கஷ்டங்களில் இருப்பது, அவர்களுக்கு எவ்வித தாக்கத்தையும் உண்டாக்காது.

6 மற்றும் 7-ம் கட்ட வாக்குப்பதிவில் என்ன நடக்கப்போகிறது என்பதை உங்களுடைய உத்வேகமும், ஆசிர்வாதமும் உணர்த்துகிறது.

மோடி வந்தவுடன் ஒவ்வொரு வீட்டுக்கும் கழிப்பறையும், மின் விநியோகமும் வந்தது. ஒவ்வொரு வீட்டுக்கும் சமையல் எரிவாயு கிடைக்கப்பெறுவதற்கான முன்னெடுப்பை எடுத்தது மோடி. ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் விநியோகத்தை வழங்குவதற்காக மோடி இரவு, பகல் பாராமல் உழைத்து வருகிறார்" என்றார் பிரதமர் மோடி.

மக்களவைத் தேர்தலுக்கான 5-ம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நிறைவடைந்தது. அடுத்த கட்ட வாக்குப்பதிவு மே 25-ல் நடைபெறுகிறது.