https://www.youtube.com/@SansadTV
இந்தியா

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்: இண்டியா கூட்டணி வேட்பாளர் சுதர்ஷன் ரெட்டி வேட்புமனுத் தாக்கல்! | Vice President

வேட்புமனுத் தாக்கல் செய்யும்போது எதிர்க்கட்சிகளின் மூத்த தலைவர்கள் உடனிருந்தனர்.

ராம் அப்பண்ணசாமி

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கு இண்டியா கூட்டணி வேட்பாளரான முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்ஷன் ரெட்டி இன்று (ஆக. 21) வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை 21 அன்று மருத்துவ காரணங்களை மேற்கோள்காட்டி பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து காலியானதாக அறிவிக்கப்பட்ட குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு செப். 9 அன்று தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த சூழலில் கடந்த ஆகஸ்ட் 17 அன்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் (என்.டி.ஏ.) வேட்பாளராக தமிழகத்தைச் சேர்ந்த மஹாராஷ்டிர மாநில ஆளுநராக இருந்த சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார்.

இதன் தொடர்ச்சியாக எதிர்க்கட்சிகள் அடங்கிய இண்டியா கூட்டணியின் வேட்பாளராக தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்ஷன் ரெட்டி அறிவிக்கப்பட்டார்.

நேற்று (ஆக. 20) சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்புமனுத் தாக்கல் செய்த நிலையில், தேர்தல் நடத்தும் அலுவலரான மாநிலங்களவை செயலர் பி.சி. மோடியிடம் இன்று (ஆக. 21) சுதர்ஷன் ரெட்டி வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

இண்டியா கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, சரத் பவார், பா. சிதம்பரம், ராம் கோபால் யாதவ், திருச்சி சிவா, சஞ்சய் ராவத், என். பிரேமசந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.