ANI
இந்தியா

வினாத்தாள் கசிவால் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: எந்த மாநிலத்தில் தெரியுமா?

ஜார்கண்டில் வினாத்தாள் கசிவது இது முதல்முறை அல்ல. இந்த விவகாரத்திற்கு பொறுப்பேற்று கல்வித்துறை அமைச்சர் ராம்தாஸ் சோரன் பதவி விலக வேண்டும்.

ராம் அப்பண்ணசாமி

வினாத்தாள் கசிவால், ஹிந்தி மற்றும் அறிவியல் பாடங்களுக்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

10-ம் மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த பிப்ரவரி 11 அன்று ஜார்க்கண்டில் தொடங்கின. 10-ம் வகுப்புக்கான ஹிந்தி தேர்வு பிப்ரவரி 18 அன்றும், இதைத் தொடர்ந்து அறிவியல் தேர்வு பிப்ரவரி 20 அன்றும் நடைபெற்றது. ஆனால் வினாத்தாள் கசிவு காரணமாக இந்த இரு தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

திட்டமிட்ட நாட்களில் காலை 9.45 மணி முதல் நண்பகல் 1 மணி வரை இந்த இரு தேர்வுகளும் நடைபெற்றன. ஆனால் சம்மந்தப்பட்ட தேர்வு நாட்கள் அன்று தேர்வு நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே வினாத்தாள்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின.

இதைத் தொடர்ந்து சம்மந்தப்பட்ட தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது ஜார்க்கண்ட் கல்வி வாரியம். மறுதேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ள பள்ளிக்கல்வித்துறை செயலர் உமா சங்கர் சிங், `கோடர்மா மாவட்டத்தில் வினாத்தாள் கசிந்துள்ளது. இது தொடர்பாக 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்குமாறு கோடர்மா துணை ஆணையரிடம் கோரப்பட்டுள்ளது. அறிக்கை கிடைத்ததும், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

இது தொடர்பாக தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் பதிவிட்டுள்ள பாஜக மாநில தலைவர் பாபுலால் மராண்டி, `ஜார்கண்டில் வினாத்தாள் கசிவு ஏற்படுவது இது முதல்முறை அல்ல. இந்த விவகாரத்திற்கு பொறுப்பேற்று கல்வித்துறை அமைச்சர் ராம்தாஸ் சோரனும், ஜார்க்கண்ட் கல்வி வாரியத்தின் தலைவர் நட்வா ஹன்ஸ்டாவும் ராஜினாமா செய்யவேண்டும்’ என்று விமர்சித்தார்.