உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக, காலிப் பணியிடங்களுக்கான நேரடி நியமனங்கள் மற்றும் பணியாளர்களுக்கான பதவி உயர்வில், பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான உச்ச நீதிமன்றத்தின் முடிவு குறித்த தகவல், சுற்றறிக்கை வாயிலாக ஜூன் 24 அன்று அனைத்து உச்ச நீதிமன்ற ஊழியர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றறிக்கையில், `..அறிவுறுத்தல்களின்படி, மாதிரி இட ஒதுக்கீடு பட்டியல் மற்றும் பதிவேடு, சுப்நெட்டில் (உச்ச நீதிமன்ற மின்னஞ்சல் நெட்வொர்க்) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது மற்றும் ஜூன் 23, 2025 முதல் அது அமலுக்கு வருகிறது.
மேலும், பட்டியல் அல்லது பதிவேட்டில் உள்ள தவறுகள் குறித்து எந்தவொரு ஊழியரும் ஆட்சேபனைகளை எழுப்ப விரும்பினால், அவர்கள் அது குறித்து பதிவாளரிடம் (ஆட்சேர்ப்பு) தெரிவிக்கலாம் என்பது தெரிவிக்கப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது
தற்போது நடைமுறையில் உள்ள சுற்றறிக்கை மற்றும் மாதிரி இட ஒதுக்கீடு பட்டியலின்படி, உச்ச நீதிமன்ற காலிப் பணியிடங்களில் பட்டியல் சாதியினருக்கு 15 சதவீதமும், பட்டியல் பழங்குடியினருக்கு 7.5 சதவீதமும், இட ஒதுக்கீடு வழங்கப்படவுள்ளது. பணியாளர்களுக்கான பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய கொள்கையின்படி மூத்த தனி உதவியாளர், உதவி நூலகர், இளநிலை நீதிமன்ற உதவியாளர், இளநிலை நீதிமன்ற உதவியாளர் மற்றும் இளநிலை நிரலாளர், இளநிலை நீதிமன்ற அடெண்டர், சேம்பர் உதவியாளர் (ஆர்) உள்ளிட்ட பணியிடங்களுக்கு இந்த இட ஒதுக்கீட்டுக்கான பலன்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.